ஒரு சமூகத்தினருக்கு மழை எவ்வளவு சிக்கலானது என்பதை மஞ்சள் உணர்த்துகிறது- பா. ரஞ்சித்

/files/detail1.png

ஒரு சமூகத்தினருக்கு மழை எவ்வளவு சிக்கலானது என்பதை மஞ்சள் உணர்த்துகிறது- பா. ரஞ்சித்

  • 3
  • 0

 

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 19) மாலை 5 மணிக்கு  சென்னை எழும்பூரில் உள்ள தொன்போஸ்கோ ஆடிட்டோரியத்தில் “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம்” என்ற தலைப்பிலான மஞ்சள் நாடகம்  நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், ”பொதுச் சமூகத்தை நோக்கி மஞ்சள் நாடகம் நகரவேண்டும். இங்கு இருக்கிறவர்களுக்கு இப்பிரச்னை குறித்த புரிதல் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த நாடகத்தில்  “நாங்கலெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுரமா”என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதை நான் மிக முக்கியமாகப் பார்க்கிறேன். கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இந்த பிரச்னையை புரிந்துகொள்ள முடியாத சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். இந்த நாடகத்தை பொதுச்சமூகத்திடம் கொண்டு சேர்க்கும்போதுதான் பல கேள்விகளை நமக்குள் உருவாக்கும்.

மழை எவ்வளவு அழகானது என்று சொல்லும் காலகட்டத்தில், ஒரு சமூகத்தினருக்கு மழை எவ்வளவு சிக்கலானது என்பதை மஞ்சள் நாடகத்தை விட மிக அற்புதமாகப் பேசமுடியாது. அந்த அளவிற்கு இந்த கலைப் படைப்பு மிக முக்கியமான அரசியல் படைப்பாகவும், அதே நேரத்தில் நம் உள்ளங்களில் இருக்கிற அறியாமை தனங்களைக் கேள்வி எழுப்புகிற வேலையையும் இந்த நாடகம் செய்திருக்கிறது. இந்த நாடகத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லவேண்டும். அப்போதுதான் சமூக சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை மஞ்சள் கண்டிப்பாகச் செய்யும். 

பொதுவாக பண்ணை அடிமை முறையிலிருந்துதான் நாம் எல்லோரும் வந்திருக்கிறோம். என்னுடைய வீடு கூட ஏதாவதொரு ஆண்டைவிட்டுக்கு கீழ்தான் வேலை செய்திருக்கலாம். வெட்டியான் சமூகமாக இருந்ததால் ஊருக்குள் வெட்டிவேலை பார்க்கும் சமூகத்திலிருந்துதான் நாங்களும் வந்திருக்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு என்னால் வெட்டியான் வேலை பார்க்கமுடியாது என்று என்னுடைய அப்பா மறுத்திருக்கிறார். அதன்பிறகு என் குடும்பம் இன்று வெட்டியான் வேலையை செய்யவில்லை. அந்த முடிவு மிக முக்கியமானதாக எங்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கிறது.

இந்த முடிவை நாம் அனைவரும் எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. இந்த முடிவை நாம் எடுப்பதற்கு மிக முக்கியமான ஆளுமையாகப் புரட்சியாளர் அம்பேத்கர் இருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கரைப் படிப்பதன் மூலமாக இந்த பிரச்னையிலிருந்து நம்மால் வெளிவர முடியும். எதிர்ப்பின் அடையாளமாக அவர் இருக்கிறார். இந்த பிரச்னையிலிருந்து வெளிவரச் சிந்தனையை மஞ்சள் நாடகம் உருவாக்கும் என்று நினைகிறேன். இங்கிருப்பவர்கள் மஞ்சள் நாடத்தை உங்கள் பகுதியில் அரங்கேற்றுவதற்கான வேலையைச் செய்யுங்கள்” என்று கூறினார்.
 

Leave Comments

Comments (0)