மலம் அள்ளுவது மனிதர்கள் செய்யும் வேலை கிடையாது என்று முற்றிலுமாக தடை செய்யவேண்டும்- எழுத்தாளர் மதிமாறன்

/files/detail1.png

மலம் அள்ளுவது மனிதர்கள் செய்யும் வேலை கிடையாது என்று முற்றிலுமாக தடை செய்யவேண்டும்- எழுத்தாளர் மதிமாறன்

  • 1
  • 0

 

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 19) மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள தொன்போஸ்கோ ஆடிட்டோரியத்தில் “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம்” என்ற தலைப்பிலான மஞ்சள் நாடகம்  நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய எழுத்தாளர் மதிமாறன், “எந்த பிரச்னையை எடுத்தாலும் அதில் பிரதான பிரச்னையாக இருப்பது கையால் மலம் அள்ளும் பிரச்னைதான். ஆனால் நாம் போராடவேண்டிய பட்டியலில் கடைசியாகக் கூட அந்த பிரச்னை இல்லை என்பது வெட்கக் கேடான விசயம். கையால் மலம் அள்ளும் பிரச்னையை பிரதான படுத்தி இந்தியா முழுக்க யார் போராடுகிறார்கள் என்றால், அந்த தொழிலில் ஈடுபடுத்தப்படும் மக்கள்தான் போராடுகிறார்கள்.

கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பொது பிரச்னையாக இருக்கக்கூடிய அனைத்து பிரச்னைக்கும் முதலில் நிற்கிறார்கள். ஆனால் கையால் மலம் அள்ளும் பிரச்னை வந்தால் மட்டும் அந்த மக்கள் மட்டும்தான் போராடுகிறார்கள். இப்படி ஒரு அவலமான சூழல் இருக்கும் நிலையில், அதை பொது பிரச்னையாக மாற்றவேண்டும்.

கையால் மலம் அள்ளும் பிரச்னை வெளிநாடுகளில் ஒரு தண்டனையாகக்கூட கிடையாது. மனிதக் குல விரோதி, யூதர்களை மிகக் கொடூரமாக வெட்டி கொன்ற ஹிட்லர் ஜெர்மானியர்களின் மலங்களை யூதர்கள் அள்ளவேண்டும் என்று ஒரு சட்டம் போடவில்லை. ராஜபக்சே கூட சிங்களவர்களின் மலத்தை தமிழர்கள் அள்ளவேண்டும் என்று கொண்டுவரவில்லை.

உலகத்தில் பாசிஸ்ட்டுக்கள் கூடச் செய்ய அச்சப்பட்ட ஒரு விசயம் இந்தியாவில் தண்டனையாகக் கூட இல்லாமல் புனிதமாக இருக்கிறது. இந்த தொழிலுக்கு நல்ல சம்பளம் கொடுத்துச் சிறந்த சாதனங்கள் கொடுத்து தொழிற்சங்க பின்னணியில் கட்டமைப்பதுகூட இன்னொருவகையில் அந்த சமூக மக்களை அதற்குள்ளேயே இட்டுவைக்கவேண்டும் என்ற நோக்கம்தான்.

இது ஒரு தொழிலே கிடையாது. இது மனிதர்கள் செய்யும் வேலை கிடையாது என்று முற்றிலுமாக தடை செய்து மூடி வைப்பதுதான் நிரந்தர தீர்வு. மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பவர்களை அதிலிருந்து விடுவித்து மரியாதைக்குரிய அரசு வேலை வழங்கவேண்டும். அதுதான் அதற்குத் தீர்வு” என்று தெரிவித்தார். 

Leave Comments

Comments (0)