தலித்துகளுக்கு எதிரான வன்முறை தமிழ்நாட்டில் அதிகரிப்பு - என்சிஆர்பி அறிக்கையில் தகவல்

/files/detail1.png

தலித்துகளுக்கு எதிரான வன்முறை தமிழ்நாட்டில் அதிகரிப்பு - என்சிஆர்பி அறிக்கையில் தகவல்

  • 0
  • 0

இந்தியாவிலேயே தலித் மக்களுக்கு எதிரான கலவரங்கள் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது என்று ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ”மத்திய அரசின் அமைப்பான தேசிய குற்ற ஆவண மையத்தின் ( NCRB) அறிக்கை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கைக்குப் பிறகு NCRB அறிக்கை வெளியிடப்படாததைச் சுட்டிக்காட்டி நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். விரைவில் வெளியிடப்படும் எனப் பதிலளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இப்போது இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.

2016, 2017ஆம் ஆண்டுகளுக்கான புள்ளி விவரங்கள் அந்த அறிக்கையில் தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

alt text

2017ஆம் ஆண்டு தலித் மக்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் 170 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 246 தலித்துகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐபிசி பிரிவு 147 முதல் 151 இன் கீழ் பதிவான வழக்குகளில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தலித் மக்களுக்கு எதிரான கலவரங்கள் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 452 சம்பவங்களில் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதற்கடுத்து மகாராஷ்டிராவில் 197 கலவரங்களில் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; மூன்றாவதாகத் தமிழ்நாட்டில்தான் 170 கலவர சம்பவங்களில் 246 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அதுபோல தலித் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் 55 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 26 பேர்,18 வயதுக்குக் குறைந்த சிறுமியர் 29 பேர்.

2017 ஆம் ஆண்டில் மட்டும் 49 சம்பவங்களில் 56 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் 2017ஆம் ஆண்டில் 1273 சம்பவங்களில் 1472 தலித்துகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலித் மக்களுக்கு எதிராக ஆயிரத்துக்கும் அதிகமான தாக்குதல்கள் நடைபெறும் 10 மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. அருகாமையில் உள்ள கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை விடத் தலித்களுக்கு எதிரான வன்முறை தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2016ஆம் ஆண்டு 1291 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அது 2017 இல் 1362 ஆக அதிகரித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் தலித்துகளுக்குப் பாதுகாப்பில்லை என்பதையே இது காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)