உன்னாவ் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணை தீ வைத்து எரித்த ஆதிக்கம்

/files/detail1.png

உன்னாவ் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணை தீ வைத்து எரித்த ஆதிக்கம்

  • 1
  • 0

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாஜக எம்எல்ஏ-வால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது அந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17- வயது சிறுமியை, கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டு முன்பு, பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயும் தீ குளித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதனையடுத்து குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உன்னாவ் சிறுமி பயணித்த காரின்மீது லாரி ஒன்று மோதியது. இதில் சிறுமிக்கும், அவரது வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தீவிர மருத்துவச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிறுமியுடன் பயணித்த அவரின் இரண்டு பெண் உறவினர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண், `தன்னை கொலை செய்வதற்கான முயற்சிதான் அந்த சாலை விபத்து` என்று புகார் அளித்தார்.  

இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகப் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் உட்பட 5 பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை வழிமறித்து, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்தப் பெண், டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

Leave Comments

Comments (0)