ஒட்டுமொத்த நீரையும் நிலத்தையும் பாழாக்க பார்க்கிறார்கள்: பேராசிரியர் த.செயராமன்

/files/detail1.png

ஒட்டுமொத்த நீரையும் நிலத்தையும் பாழாக்க பார்க்கிறார்கள்: பேராசிரியர் த.செயராமன்

  • 0
  • 0

எண்ணெய் - எரிவாயு எடுப்பால், நீரும் நிலமும் பாழாகி, மக்கள் நோயாளிகளாக மாறுவது உலக அளவில் நிரூபிக்கப்பட்ட உண்மை என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஓராண்டில் மட்டும் காவிரிப் படுகையில் 489 ஹைட்ரோகார்பன் எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்க எண்ணெய் - எரிவாயு நிறுவனங்கள் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்த நிலையில், அது பெரும்பாலும் அனுமதியும் பெற்றுவிட்டன.

alt text

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஓஎன்ஜிசி-யின் சென்னை அலுவலகம் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பியுள்ளது.
அதில், மேலும் 20 புதிய எண்ணெய் கிணறுகளைக் காவிரிப் படுகையில் அமைக்க ஆய்வு அனுமதி கோரியுள்ளது. இவை ஒற்றை லைசன்ஸ் திட்டத்தின் கீழ், அனைத்து ஹைட்ரோகார்பன்களையும் எடுப்பதற்கானவை.

* கடலூர் மாவட்டத்தில் -2 ஹைட்ரோகார்பன் கிணறுகள்
(சிதம்பரம்,காட்டுமன்னார்கோவில்)

* நாகை மாவட்டத்தில் - 15 கிணறுகள் (சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி)

* காரைக்கால் - 3 கிணறுகள் (நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருநள்ளாறு )

* மயிலாடுதுறையைச் சுற்றி சோழச்சக்கரநல்லூர், ஆனதாண்டவபுரம், சேந்தங்குடி இன்னும் பல இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட இருக்கின்றன.

இனி, இப்பகுதிகளில் நலத்திட்டங்களைத் தேடித்தேடி வழங்க எண்ணெய் நிறுவனம் துடியாய் துடிக்கும். இக்கிணறுகள் 3500 மீட்டர் முதல் 5000 மீட்டர் ஆழத்திற்கு அமைக்கப்படும். ஒவ்வொரு கிணறும் 32 கோடி செலவு என, மொத்தம் 640 கோடி செலவில் அமைக்கப்படும். அபாயகர நீரியல் விரிசல் முறையில்தான் 5000 மீட்டர் ஆழத்தில் ஷேல் பாறைகளை நொறுக்கி எண்ணெய் -எரிவாயு எடுக்க முடியும். இது ஒட்டுமொத்தமாக இந்த ஊர்களைப் பாழ்படுத்தி மக்களை மண்ணை விட்டு வெளியேறச் செய்யும்.

எண்ணெய் - எரிவாயு எடுப்பால், நீரும் நிலமும் பாழாகி, மக்கள் நோயாளிகளாக மாறுவது உலக அளவில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

பொதுத்துறையானாலும், தனியார்துறையானலும் ஓர் உத்தியைக் கையாளுகிறார்கள். நிலத்தடி நீரைப் பாழாக்கிவிட்டு, மக்கள் நலனுக்காக என்று கூறிக்கொண்டு குடும்பத்துக்கு 20 லிட்டர் குடிநீர் வசதி செய்து தருவது என்றும், கழிப்பறை அமைத்துத் தருவது என்றும், நலத்திட்டங்கள் என்றும், ஊரில் குளத்துக்குத் தூர் வாருவது, வாய்க்காலுக்குத் தூர் எடுப்பது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பொருட்கள் வழங்குவது என்றும், மக்கள் மதிக்கும் மறைந்த தலைவர்களுக்கு விழாக்கள் என்றும், கபடிப் போட்டி, வாலிபால் போட்டி நடத்துவது என்றும் - பல வழிகளில் அழிவை எதிர்நோக்கும் மக்களுக்கு ஆசைகாட்டி, மக்களின் எதிர்ப்பைச் சரிக்கட்டி, எப்படியாவது எண்ணெய்க் கிணறுகளை அமைத்து விட முயற்சி செய்கின்றன.

பிரமுகர்கள் மற்றும் காசுக்கு மலிந்து போகிறவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, நலத்திட்ட உதவி கேட்டு விண்ணப்பிக்கும்படி கூறுகிறார்கள். எலிப்பொறியில் வைக்கப்படும் தேங்காய்க் கீற்றும் இந்த நலத்திட்டங்களும் ஒன்றே! மக்கள் ஏமாற வேண்டாம்.

இன்று சிறிய நலன்களைத் தந்துவிட்டு, ஒட்டுமொத்த நீரையும் நிலத்தையும் பாழாக்கிவிடுவார்கள். வருங்கால சந்ததிகளுக்குப் புற்றுநோயும், மருந்தில்லாத நோய்களும், நீர் அற்ற, விவசாயம் நடக்காத, வாழத் தகுதியற்ற மரண பூமியும் பரிசாகக் கிடைக்கும்.

இந்த மண்ணில் நம் சந்ததிகள் தொடர்ந்து வாழ, எண்ணெய் நிறுவனங்கள் இன்று அளிக்கும் அற்பப் பரிசுகளை ஏற்க மறுத்து விடுங்கள்! அப்படியின்றி பரிசுகளையோ, பணத்தையோ ஏற்பது உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம். இன்று கிடைக்கும் பரிசுப் பொருட்களா? - நாளை நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இம்மண்ணில் தொடர்ந்து வாழும் நோயற்ற ஆரோக்கிய வாழ்வா? _ இவற்றுள் எது முக்கியம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)