காவிரி டெல்டா பகுதி முழுவதையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் சதி இருக்கிறது- மே 17 இயக்கம்

/files/detail1.png

காவிரி டெல்டா பகுதி முழுவதையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் சதி இருக்கிறது- மே 17 இயக்கம்

  • 0
  • 0

காவிரி டெல்டா பகுதி முழுவதையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் சதி இருக்கிறது என்று மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (அக்டோபர் 04) மே 17 இயக்கத் தோழர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னால் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வேலூர் விஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய நீர்வளம் மற்றும் தரைவழி துறை அமைச்சர் நிதின் கட்காரி ’காவிரி பிரச்னையை எங்களால் தீர்க்க முடியவில்லை’என்று கைவிரித்துப் பேசினார். இத்தனைக்கும் காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் நாங்கள் மத்தியஸ்தம் செய்து வைக்கிறோமென்று இத்தனை வருடம் சொல்லிவந்த மத்திய அரசு திடீரென்று இப்படிப் பேசுகிறதே என்று பலருக்குக் குழப்பம். ஆனால் அமைச்சர் இயலாமையிலோ அல்லது விரக்தியிலோ அந்தப் பேச்சைப் பேசவில்லை. அவரின் பேச்சுக்குப் பின்னால் காவிரி டெல்டா பகுதி முழுவதையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் சதி இருக்கிறது. அதாவது கடந்த ஜூலை 25ஆம் தேதி மக்களவையில் ’மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறு (திருத்தம்) மசோதா 2019 அறிமுகப்படுத்தப்பட்டுக் கடந்த ஜூலை 31ஆம் தேதி அன்று நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் மாநிலங்கள் தங்களுக்கு இடையே இருக்கும் நதிநீர் சிக்கலைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் மத்திய அரசு நியமிக்கும் குழுவின் பரிந்துரைப்படி அந்த நதியை முழுமையாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்.

ஆகவே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி பிரச்னை தீரவில்லை என்றால் அதனை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் வகையிலேதான் அமைச்சரின் அந்தப் பேச்சு இருக்கிறது. ஆகவே காவிரி பிரச்னை தீரவில்லை என்று இனி இந்த மசோதாவை காரணம் காட்டி காவிரி டெல்டாவை முழுமையாக மத்திய அரசு எடுத்துக் கொள்ளும். அதன் பின் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவுத் திட்டங்களை நிறைவேற்ற ஓஎன்ஜிசி அம்பானி அதானி ஸ்டெர்லைட் அனில் அகர்வால் போன்றவர்களுக்கு எந்த சிக்கல் இல்லாமல் கொடுக்கும். இதற்காகத்தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை கணக்கில் கொண்டு தான் அமைச்சர் நிதின்கட்கரியும் அப்படிப் பேசியிருக்கிறார். ஆகவே தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் இது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave Comments

Comments (0)