இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்த மேட்டுப்பாளையம் தலித் மக்கள்

/files/detail1.png

இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்த மேட்டுப்பாளையம் தலித் மக்கள்

  • 1
  • 0

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் கொல்லப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையும், பாதுகாப்பும் வேண்டி இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளனர். 

மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில், துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்கு சொந்தமான வீடு உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவருடைய வீட்டைச் சுற்றி, ஆணவ சாதி மக்களையும் தலித் மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையில் 20 அடி தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார்.

கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாகக் கடந்த டிசம்பர் 03ஆம் தேதி பெய்த மழையினால் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.

தீண்டாமை சுவரால் 17 தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. மேலும் 17 பேரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடிய  நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்க்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் மீது காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் தோழர் நாகை திருவள்ளுவன் மட்டும் வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாகத் தீண்டாமை சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். அவர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை. மேலும் கடந்த 20ஆம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

இந்நிலையில், 17 பேரை இழந்து தவிக்கும் அந்த தலித் மக்கள், ”தங்களது எந்த நீதியும் கிடைக்கவில்லை. தலித் என்ற ஒரு காரணத்திற்காக நாதியற்று இருக்கிறோம். கோவையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடக்கும் தீண்டாமை கொடுமை அதிகரித்துவருகிறது. இதனால் எதிர்வரும் 5ஆம் தேதி சுயமரியாதையும், பாதுகாப்பும் வேண்டி நாங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளோம்” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

Leave Comments

Comments (0)