கிராமத்தை விட்டு வெளியேற விரும்பும் கொல்லப்பட்ட தலித் குழந்தைகளின் குடும்பத்தினர்

/files/detail1.png

கிராமத்தை விட்டு வெளியேற விரும்பும் கொல்லப்பட்ட தலித் குழந்தைகளின் குடும்பத்தினர்

  • 0
  • 0

பொது வெளியில் மலம் கழித்ததற்காக கொல்லப்பட்ட இரண்டு குழந்தைகளின் குடும்பம் தற்போது வாழ்ந்துவரும் பாவ்கேதி கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள பாவ்கேதி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் பால்மிகி. இவருடைய மகன் அவினாஷ் பால்மிகியும் (10), தங்கை  ரோஷனி பால்மிகியும் (12 கடந்த புதன் கிழமை காலை 6.30 மணிக்குப் பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகே உள்ள பொதுவெளியில் மலம் கழித்திருக்கின்றனர். இதைப் பார்த்த யாதவர் சாதியைச் சேர்ந்த ஹக்கீம் யாதவ் மற்றும் அவரது சகோதரர் ராமேஸ்வர் யாதவ் ஆகிய இருவரும் அந்த குழந்தைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகள்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  

குழந்தைகளை கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய ஹக்கீம் யாதவ் மற்றும் அவரது சகோதரர் ராமேஸ்வர் யாதவ் இருவர் மீதும் எஸ். சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இரு உயிர்களை பறிகொடுத்த அந்தக் குடும்பம், உயிருக்கு பயந்து தற்போது வாழ்ந்துவரும் பாவ்கேதி கிராமத்தை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளனர். ”இதுவரை எங்களை யாரும் அச்சுறுத்தவில்லை. ஆனால் அவர்களுக்கு எதிராகக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதால் அவர்கள் சிறிது காலத்திற்குப் பிறகு எங்களைப் பலிவாங்கலாம். எங்களுக்கு இங்குப் பாதுகாப்பு இல்லை. எனது மகனையும், தங்கையையும் இழந்துவிட்டேன். இனி எனக்கு எந்த வித பயமும் இல்லை. அவர்கள் எங்களைத் தாக்கத் துணிந்தால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்” என்று மனோஜ் பால்மிகி தெரிவித்துள்ளார்.

ஷிவ்புரி மாவட்ட ஆட்சியர் அனுகிரகா, “மனோஜியின் குடும்பத்தினர்  ஊரைவிட்டுச் செல்ல விரும்பினால், அவர்களுக்கு உதவி செய்வோம். இந்த பாவ்கேதி கிராமத்தில் மனோஜியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் சாதியைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்ல உதவி செய்வோம்.

alt text

எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீதமுள்ள ரூ. 4 லட்சம் வழங்கப்படும்” என்று அனுகிரகா கூறினார்.

பாவ்கேதி மனோஜ் பால்மிகியின் குடும்பம் மட்டுமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள்  தனிமைப் படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள். மனோஜ் பால்மிகி குடும்பத்தின் உறவினர்களான கல்லா பால்மிகி குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்து வெளியேறி வேறு பகுதிக்குச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)