தலித் சமூகத்தைச் சேர்ந்த 6 முதியவர்களின் வாயில் மனித மலத்தை திணித்த கொடுமை

/files/detail1.png

தலித் சமூகத்தைச் சேர்ந்த 6 முதியவர்களின் வாயில் மனித மலத்தை திணித்த கொடுமை

  • 2
  • 0

தலித் சமூகத்தைச் சேர்ந்த முதியவர்கள் 6 பேரை அடித்துத் துன்புறுத்தி, பற்களைப் பிடுங்கி, அவர்களின் வாயில் மனித மலத்தைத் திணித்த 29 பேரை ஒடிசா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமான கோபாபூரில், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இச்சம்பவம் நடந்திருக்கிறது. சமீப காலமாக கோபாபூரில் மூன்று பெண்கள் நோய்வாய் பட்டு இறந்திருக்கின்றனர். மேலும் 7க்கும் மேற்பட்டோர் நோயில் அவதி பட்டுவருகின்றனர். இதற்குக் காரணம் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜோகி நாகாக், சானியா நாகாக், ராமா நாகாக், ஜோகி நாகாக், ஹரி நாகாக், துருஜா நாகாக் ஆகிய ஆறு பேர்தான் சூனியம் வைத்து மூன்று பெண்களைக் கொலை செய்திருக்கின்றனர் என எண்ணி கிராம மக்கள் அந்த ஆறு பேரையும் பிடித்துத் தாக்கி, சித்ரவதை செய்து, பற்களைப் பிடுங்கி அவர்களின் வாயில் மலத்தைத் திணித்திருக்கின்றனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றனர். `எங்கள் கிராம விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாம்` என ஒரு குழுவாகப் பெண்கள் வந்து  காவல்துறையினரை ஊருக்குள்செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இதனையடுத்து வலுக்கட்டாயமாக்கக் கிராமத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் , பாதிக்கப்பட்ட அந்த ஆறு பேரையும் மீட்டு, சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்களது உடல்நிலை மோசமாக இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் கட்டாக்கிலுள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கோபாபூரில் மூன்று பெண்கள் உயிரிழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் குழு கிராமத்திற்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையில், அந்த மூன்று பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இறந்ததாக முதற்கட்ட ஆய்வில்  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடந்த புதன் கிழமை ஒடிசா காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 29 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 29 பேரில் 22 பேர் பெண்கள்.

Leave Comments

Comments (0)