ஸ்டெர்லைட் ஆலை வழக்கு- 16ஆம் தேதி தொடங்குகிறது

/files/detail1.png

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு- 16ஆம் தேதி தொடங்குகிறது

  • 0
  • 0

எதிர்வரும் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு, ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அவ்வாலையிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் புற்றுநோய், தோல் நோய், மலட்டுத் தன்மை போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு பெரும் இன்னல்களைச் சந்தித்து வந்தனர். இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இந்த ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல நாட்களாகப் போராட்டம் நடத்திவந்த நிலையில், கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட மக்கள் சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பேரணியாகச் சென்றனர். அப்போது பேரணியாகச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வெளிநாட்டு வேதாந்தா நிறுவனத்திற்காகச் சொந்த நாட்டு மக்களையே சிறிதும் இரக்கம் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்தது எடப்பாடி அரசு. இதில் இரண்டு பெண்கள் உட்பட 16 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், சிலர் கை, கால்களை இழந்து வாழ்நாள் முடக்கமாகியுள்ளனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2018 ஏப்ரல் மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கினை விசாரித்த தீர்ப்பாயம் 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்குத் தடை விதித்து, தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பளித்தனர்.

இதனை தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. இந்தவழக்கின் விசாரணை எதிர்வரும் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)