5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் - தன்னாட்சித் தமிழகம்

/files/detail1.png

5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் - தன்னாட்சித் தமிழகம்

  • 0
  • 0

 

மக்கள் விரோத, சமூகநீதிக்கெதிரான, தமிழ்நாட்டின் உரிமைகளை, கல்விக் கட்டமைப்பைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது எனவும், உடனடியாக இந்த ஐந்து, எட்டு வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தும் அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தன்னாட்சித் தமிழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அவ்வியக்கத் தோழர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”இந்திய ஒன்றிய அரசு புதியக் கல்விக் கொள்கை 2019 என்ற ஒரு வரைவு திட்டத்தை வெளியிட்டு அதன் மீதான கருத்துக்களை மக்களிடமும், மாநில அரசுகளிடமும் கேட்டுள்ளது. அந்த திட்டமானது வஞ்சகமாகக் கல்வி உரிமையை முழுவதுமாக மாநில அரசிடமிருந்து பறிப்பதோடல்லாமல், குழந்தைகள் மீதான வன்முறையாகவும், எளிய, கிராமப்புற, நடுத்தர வர்க்கத்துப் பிள்ளைகளைக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் செயல்திட்டமாகவே உள்ளது எனக் கல்வியாளர்களும், மக்கள் நல, முற்போக்கு இயக்கங்களும், சமூகநீதி இயக்கங்களும் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. ஆனால் இது குறித்தோ, புதிய கல்விக் கொள்கை குறித்தோ எவ்விதக் கருத்தும் தெரிவிக்காத தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசே அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் தராத திட்டத்தை முறையற்ற வகையில், சமூக நீதிக்கெதிரான, தமிழ்நாட்டிற்கு எதிரான இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது. இந்துத்துவ மோடி அரசின் தயவிற்காகத் தமிழ்நாட்டின் நலன்களைத் தொடர்ந்து பலியிட்டு வருகிறது.

இந்தாண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு எனக் கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. அனைத்துத் தரப்பிலும் (பாசக, அதிமுகவினரைத் தவிர்த்து) எதிர்ப்பு வரவே இன்னும் மூன்றாண்டிற்கு நடைமுறைப்படுத்த மாட்டோம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால் தற்போது மீண்டும் அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு என அறிவித்துள்ளனர். உலகெங்கும் உள்ள கல்வியிற்ச் சிறந்த நாடுகள் குழந்தைகள் மீதான சுமையையும், தேர்வு முறைகளையும் குறைத்து முற்போக்காக முன்னேறி வரும் வேளையில் இந்திய  இந்துத்துவ இயக்கங்கள் பிற்போக்காக முன்னேறி பண்டைய குருகுலக் கல்வியை நோக்கி இழுத்துச் செல்கின்றனர். கல்வியை வெகுமக்களுக்கில்லாததாக்குகின்றனர். கையாலாகாத, எடுபிடி தமிழ்நாட்டரசும் அவர்கள் நினைப்பதை நிறைவேற்றித் தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்கின்றனர்.

மக்கள் விரோத, சமூகநீதிக்கெதிரான, தமிழ்நாட்டின் உரிமைகளை, கல்விக் கட்டமைப்பைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது எனவும், உடனடியாக இந்த ஐந்து, எட்டு வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தும் அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அதே போலத் தமிழகத்தில் எந்தக் காலத்திலும் மும்மொழிக் கொள்கை, எந்த வடிவிலும் நடைமுறைப்படுத்தப்படாது எனக் கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசிற்குத் தன்னாட்சித் தமிழகம் கோரிக்கை விடுக்கிறது.

தவறும்பட்சத்தில் மக்கள் விரோத இந்துத்துவ செயல்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் அதிமுக அரசிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும் எனத் தன்னாட்சித் தமிழகம் அழைப்பு விடுக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave Comments

Comments (0)