இந்தியாவின் முதல் பால்புதுமையினர் இலக்கியவிழா

/files/detail1.png

இந்தியாவின் முதல் பால்புதுமையினர் இலக்கியவிழா

  • 3
  • 0

-கிரீஷ்

குயர் சென்னை கிரானிக்கள்ஸ் பதிப்பகத்தின் இரண்டாவது சென்னை குயர் இலக்கியவிழா கடந்த பதினான்காம் (செப்டம்பர் 14) தேதி கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

பால்புதுமையினரின் இலக்கியங்கள் மிக மிகக் குறைவாக இருக்கும் சூழ்நிலையில் அவ்விலக்கியங்களை ஊக்குவிக்கவும் அவ்விலக்கியங்களைப் பற்றிப் பேசவும் புதிதாக எழுதுபவர்களை ஆதரிக்கவும் குயர் சென்னை கிரானிக்கள்ஸால் இவ்விலக்கியவிழா 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்முறையாக முழுநாள் நிகழ்வாகச் சென்னையில் நடத்தப்பட்டது. இந்தியாவின் முதல் பால்புதுமையினர் இலக்கியவிழா இதுதான் என்பது குறுப்பிடத்தக்கது. 

alt text

2019-ம் ஆண்டுக்கான நிகழ்வு தென்சென்னைத் தொகுதி திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் உரையோடுத் தொடங்கியது. பலநூற்றாண்டுகளாக பால்புதுமையினர் இலக்கியம் எழுதப்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் தற்போதைய சூழ்நிலையில் பால்புதுமையினர் இலக்கியங்களும் தலித் இலக்கியங்கள் போன்ற ஒரு தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். பல புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரலாற்றிலும் பால்புதுமையினர் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் அவை பால்புதுமையினரைக் கொச்சைப்படுத்துவதாகவே இருப்பதால் வரலாற்றிலுள்ள அந்தக் கதைகள் அனைத்தும் திருப்பி எழுதப்படவேண்டும் எனவும் குறுப்பிட்ட அவர் நால்சா தீர்ப்பை அமல்படுத்தாததைக் குறித்தும், திருநர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.

தமிழ் பால்புதுமையினர் இலக்கியம் எனும் தலைப்பில் லண்டனில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஹரி இராஜலெட்சுமி காணொளி மூலம் உரையாற்றினார்.

குழந்தைகள் இலக்கியத்தில் அனைத்துக் குழந்தைகளும் உட்படுத்தப்படாமல் இருப்பதும், பெரும்பாலான குழந்தைகள் இலக்கியம் பெரியவர்கள் என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதையே எழுதப்படுவதும் கருத்தில் கொண்டு அனைவருக்குமான குழந்தைகள் இலக்கியம் எனும் தலைப்பில் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வமர்வில் குழந்தைகளோடு தொடர்ந்து பணியாற்றும் கல்வியாளர் சாலை செல்வம் மற்றும் எழுத்தாளர் ஷால்ஸ் மஹாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கான எழுத்துக்கள் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதும் தற்போதைய சூழ்நிலையில் அவை எவ்வாறு எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது குறித்தும் இவ்வமர்வில் உரையாடப்பட்டது. 

தமிழ் பால்புதுமையினர் இலக்கியம் குறித்து மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கில் கடந்த வருட நிகழ்வில் கன்னட பால்புதுமையினர் எழுத்தாளர் வசுதேந்திரா கலந்து கொண்டு உரையாற்றினார். இவ்வருடம் மலையாள பால்புதுமையினர் இலக்கியம் குறித்த உரையை எழுத்தாளர் கிஷோர் குமார் நிகழ்த்தினார். பல்வேறு காலங்களில் மலையாளத்தில் வெளியான பால்புதுமையினர் இலக்கியங்கள் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் இந்த உரையில் பேசப்பட்டது.

பொதுவாக இலக்கியங்களில் மொழிபெயர்ப்பு செய்யும்போது பல பதங்களும் பொருளும் அந்தந்த இடங்களுக்கேற்ப மாறிவிட வாய்ப்புள்ள நிலையில் பால்புதுமையினர் இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்வதை இன்னமும் கவனமாகவே கையாள வேண்டி இருக்கிறது. அதைக் குறித்த ஒரு உரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு எனும் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அமர்வில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வ கீதா, நெறியாளர் நாடிகா மற்றும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். குயர் எனும் வார்த்தைக்கு “பால்புதுமையினர்” எனும் மொழபெயர்ப்பு சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.

alt text

அடுத்து பால்புதுமையினர் இலக்கியத்தில் ஓவியம் எனும் தலைப்பில் அமைந்த அமர்வில் ஓவியர் வைஜெயந்தி மற்றும் ஓவியர் சமூக வரலாற்றாளர் மாரி ஸ்விக் – மைத்ரேயி கலந்துகொண்டனர். பால்புதுமையினர் தங்களது படைப்புகளை மற்றவர்களுக்கு அளிப்பதைவிட தங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என மாரி தெரிவித்தார். மேலும் பன்னாட்டு நிறுவனங்களும், சமூக வலைதளங்களும் பால்புதுமையினருக்கான இடங்களை எவ்வாறு ஆக்கிரமித்திருக்கின்றன என்பது குறித்தும் அவர் பேசினார். பால்புதுமையினர் வெளியிடங்களில் வேலை செய்யும்போது தங்களுக்கு சரி என்று தோன்றும் கருத்துக்களை வரையும்போது முடிவெடுக்கும் இடங்களில் உள்ள நபர்களைத் தாண்டி அவற்றைக் கொண்டு செல்வதிலுள்ள சிரமங்கள் குறித்து வைஜெயந்தி உரையாடினார்.

ஏற்கனவே இருக்கும் எழுத்துக்களைக் கொண்டாடுவதோடு புதியதாக எழுத வரும் பால்புதுமையினர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதன் மூலமாகவே சமகாலத்தின் அரசியலையும் பால்புதுமையினரின் வாழ்வியலையும் ஆவணப்படுத்த முடியும் என்கிற நோக்கில் வாசிப்புமேடை எனும் பகுதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாசிப்பு மேடையில் அழகு ஜெகன் மற்றும் தனசக்தி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

திருநர்களின் வாழ்க்கையைக் குறித்து அவர்களைப் பேட்டி கண்டு “இன்விசிபிள் மேன்” எனும் புத்தகத்தை நந்தினி கிருஷ்ணன் என்பவர் எழுதி இருந்தார். அதில் எழுதியிருந்த பல கருத்துகளுக்கு பேட்டி அளித்திருந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் அது குறித்து எந்த கவலையும் தெரிவிக்காமல் இருக்கும் நந்தினி கிருஷ்ணனுக்கு அந்தக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு விழா முடிவுற்றது. 

இந்தியாவின் முதல் பால்புதுமையினர் இலக்கியவிழா என்பதோடு முழுக்க முழுக்க மக்களிடம் நிதிதிரட்டி நடைபெறும் விழா என்பதாலும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் குயர் சென்னை கிரானிக்கள்ஸ் சென்னையைச் சார்ந்த பால்புதுமையினரின் வாழ்க்கையை புத்தகமாக ஆவணப்படுத்தும் வேலையையும் மேற்கொண்டு வருகிறது.
 

Leave Comments

Comments (0)