சாதிப் பெயரைக் குறிப்பிட்டு தலித் மாணவரைத் தக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது

/files/detail1.png

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு தலித் மாணவரைத் தக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது

  • 0
  • 0

கடலூரில் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கல்லூரி மாணவரைக் கடுமையாகத் தாக்கிய உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூரைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் மஞ்சக்குப்பத்தில் இயங்கிவரும் ஜெயின்ட் ஜோசப் பள்ளியில் கடந்த ஆண்டு வரலாற்றுப் பிரிவில் படித்தவர். தற்போது அதே வளாகத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் முதலாமாண்டு படித்துவருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களுக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் வரலாற்றுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் பின்னர் வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இரண்டு மாதங்களாகியும் மடிக்கணினி வழங்கவில்லை என்பதால் அப்பள்ளியில் வரலாற்றுப் பிரிவில் படித்த தினேஷ் உட்பட நான்கு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்த உடற்கல்வி ஆசிரியர் சந்திர மோகன் என்பவர் ”இந்த பக்கம் ஏன் நீங்க எல்லாம் வரீங்க, எந்த ஊர்டா நீங்கலாம்,” என்று கேட்டுள்ளார்.  அதற்கு மாணவர்கள், “பள்ளிப்பட்டு அம்பேத்கர் நகரை” சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். இதற்கு உடற்கல்வி ஆசிரியர், ”மாடு மேய்கிறவர்களுக்கெல்லாம் எதுக்குடா லேப்டாப்” எனச் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி, அடித்து இழுத்துச்சென்று பள்ளி நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்கக் கூறியிருக்கிறார். 

இதில் படுகாயமடைந்த தினேஷ் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. பலரும் உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தினேஷ் தரப்பில் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave Comments

Comments (0)