ஆளுமைகள் மீது தேசதுரோகப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது- தமுஎகச

/files/detail1.png

ஆளுமைகள் மீது தேசதுரோகப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது- தமுஎகச

  • 0
  • 0

பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்தாளர்களை மவுனமாக்கவும், சிறுமைப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பவேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமுஎகச தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “மதப் பெரும்பான்மைவாதத்தின் பெயரால் சிலர் கும்பல் சேர்த்துக்கொண்டு தலித்துகளையும் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரையும் கூட்டாகத் தாக்குவதும் கல்லால் அடித்துக் கொல்வதும் அதிகரித்துவந்ததால் இது குறித்து பிரதமரே கண்டிக்கும் நிலை உருவானது. அதன் பிறகும் நிலைமையில் மாற்றமில்லை. ’ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லுமாறு வற்புறுத்துவதானது அதில் நம்பிக்கையற்ற பிற மதத்தவரை அச்சுறுத்தவும் கொல்வதற்குமான தந்திரமாக சில கும்பல்களால் தொடர்ந்து கையாளப்பட்டுவந்தது. பிற பண்பாட்டுப் பின்புலமுள்ளவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வெறுப்பும் சகிப்பின்மையும் அதன் பேரிலான தாக்குதல்களும் படுகொலைகளும் நாட்டின் ஏதாவதொரு பாகத்தில் நிகழ்ந்த வண்ணமிருப்பது சமூக அக்கறையுள்ள குடிமக்களை பதற்ற முறச் செய்தது. அவ்வாறு பதற்றமுற்றவர்களில் ஒரு பகுதியினராகிய திரைத்துறை ஆளுமைகளும், கல்வியாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களுமாக 49 பேர் சேர்ந்து, இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும் பண்பாட்டுத் தனித்துவங்களுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஊறுவிளைவிக்கும் இப்போக்கு தடுத்து நிறுத்தப்படுவதற்குப் பிரதமரின் கண்டனம் போதாது, கடுமையான சட்டங்களும் தண்டனையும் தேவை” என்று பிரதமருக்கு கூட்டாக திறந்த மடல் ஒன்றைக் கடந்த ஜூலையில் வெளியிட்டனர். சமூகத்தில் உருவாகிவரும் அசாதாரணச்சூழல் மீது இவ்வாறு பிரதமரின் கவனத்தைக் கோருவது எப்பொழுதும் வழக்கத்தில் உள்ளதுதான் என்பதுடன் அது குடிமக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் பாற்பட்டதுமாகும். ஆனால் இந்த வேண்டுகோளை விடுத்தவர்கள் கடும் அச்சுறுத்தலுக்கும் அவதூறுகளுக்கும் ஆளாக நேர்ந்தது. இவர்களுக்கு மறுப்பறிக்கை ஒன்றும் சிலரால் வெளியிடப்பட்டது.

alt text

மேலும், இவ்வாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டுமென பிஹாரில் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் செய்ததுடன், தனது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுபோன்ற முறையீடுகளின் நோக்கங்கள் உரியக் கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டிருந்தால் வழக்குப் பதியலாம் என்கிற உத்தரவு வெளியாவதற்கான சூழல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் நீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டதைப் பயன்படுத்திக்கொண்டு காவல்துறையினர், இந்த ஆளுமைகள் மீது தேசத்துரோக பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. பொறுப்பார்ந்த குடிமக்களின் ஜனநாயகச் செயல்பாடுகளை, அவர்களது விமர்சனங்களைப் பொருட்படுத்தும் மக்களாட்சி மாண்பு மங்கி வருவதன் மற்றோர் வெளிப்பாடே இவ்வழக்குகள் என தமுஎகச கருதுகிறது. பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்தாளர்களை மவுனமாக்கவும், சிறுமைப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரலெழுப்புமாறு மக்களாட்சியில் நம்பிக்கையுள்ள அனைவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
 

Leave Comments

Comments (0)