பார்ப்பனிய திணிப்பு முயற்சியை முறியடிக்க வேண்டும்- ம.க.இ.க 

/files/detail1.png

பார்ப்பனிய திணிப்பு முயற்சியை முறியடிக்க வேண்டும்- ம.க.இ.க 

  • 0
  • 0

பொறியியல் பாடத்திட்டத்தில் ”பகவத்கீதை” சேர்க்கப்பட்டிருக்கும் பார்ப்பனிய திணிப்பு முயற்சியை அனைத்து முற்போக்கு, ஜனநாயக  இயக்கங்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டுமெனத் தமிழ்நாடு மக்கள் கலை இலக்கியக் கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பில் பகவத்கீதை பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலின் (AICTE) உத்தரவின் பேரில் பகவத்கீதை விருப்பப் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் 3-வது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியுள்ளன. இதற்கு மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.  

அவ்வகையில் தமிழ்நாடு மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில், பகவத்கீதை விருப்பப் பாடமாகச்  சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பிற தன்னாட்சி கல்லூரிகளும் இதை அமல்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இது அரசமைப்பு சட்டம் கூறுகின்ற கல்வியில் மதச்சார்பின்மை எனும் கொள்கையைக் கைவிட்டு நேரடியாக இந்துத்துவ பார்ப்பனிய கருத்தைப் புகுத்துகின்ற முயற்சி எனக் கருதுகிறோம்.

பொறியியல் பயிலும் மாணவர்கள் தத்துவத்தையும் பயின்று கொள்வது அவசியம் எனும் பேரில் ‘மதிப்புகள் மற்றும் தர்மம்’,‘தர்மமும் சிறந்த வாழ்க்கை முறையும்’ என்கிற தலைப்புகள் சேர்க்கப்பட்டு அதற்கான பாடமாகப் பகவத்கீதையும் அதன் வழியே வர்ணாசிரம சாதிய மனுதர்மமும் மாணவர்களின் மனதில் நஞ்சாக ஊட்டப்படவுள்ள அபாயத்தை எச்சரிக்கிறோம்.

தமிழகத்தில் நீண்ட நெடிய போராட்டம் நடத்திக் கண்ட சமூகநீதி, சமத்துவம், சாதித் தீண்டாமை ஒழிப்பு மரபை கழித்துக்கட்டி பார்ப்பனிய மனுதர்ம ஆட்சியை மீட்டுருவாக்கம் செய்யத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் சதித்திட்டம் இது என்பதை உறுதிப்படத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏற்கெனவே  இந்தித்திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, ரயில்வே, வங்கி, பல்கலை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் உயர் பதவிகளிலும் பிற மாநிலத்தவரைத் திட்டமிட்டு நுழைத்து தமிழை, தமிழ் மக்களின் நலனை அழிக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியே,  கல்வித் துறையில் திணிக்கப்படும் இத்தகைய  காவி பாடத்திட்டமும்.

எனவே, இத்தகைய பார்ப்பனிய திணிப்பு முயற்சியை அனைத்து முற்போக்கு, ஜனநாயக  இயக்கங்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டுமென அழைக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave Comments

Comments (0)