மேலவளவு படுகொலை: 13 பேர் விடுதலையை எதிர்த்து வழக்கு தொடரலாம்

/files/detail1.png

மேலவளவு படுகொலை: 13 பேர் விடுதலையை எதிர்த்து வழக்கு தொடரலாம்

  • 1
  • 0

மேலவளவு படுகொலை வழக்கில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதற்காக, கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்த  கிராம பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற முருகேசன் உட்பட ஏழு பேரை வெட்டி படுகொலை செய்தது ஆணவ சாதி வெறி.  

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முருகேசன். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், தலைவரானதை அப்பகுதி ஆணவ சாதியினரால் (கள்ளர்) ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தேர்தலில் போட்டியிடும்போதே முருகேசனை ஆணவ சாதியினர் எதிர்த்துவந்தனர். அவர்களின் அடக்குமுறையை மீறி முருகேசன் வெற்றி பெற்றார். இந்நிலையில் முருகேசனும் அவரது சமூகத்தைச் சேர்ந்த 5 பேரும் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஊராட்சி வேலைக்காக மதுரை மேலூருக்குச் சென்றுவிட்டு பேருந்தில் ஊர்திரும்பிக் கொண்டிருந்தபோது ஆணவ சாதி வெறியர்கள், முருகேசனின் தலையைத் தனியாக வெட்டியெடுத்துச் சாதி வெறியைத் தீர்த்து, அந்த ஐந்து பேரையும் பேருந்திலேயே வெட்டி படுகொலை செய்தனர்.

இதனைக் கேள்வியுற்று மேலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரையும், அதேநாளில் படுகொலை செய்தனர் சாதி வெறியர்கள். தமிழக வரலாற்றின் அழிக்க முடியாத கறையாக இந்த மேலளவு கொலை படிந்திருக்கிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சிறைத் தண்டனை பெற்றுவந்த சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டி சாமி ஆகிய 13 பேரும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில் இந்த 13 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்கவேண்டும் என்று வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினார். வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அவரது கோரிக்கை தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அனுமதி அளித்துள்ளனர்.

Leave Comments

Comments (0)