மேலவளவில்  கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்- எவிடன்ஸ் கதிர்

/files/detail1.png

மேலவளவில்  கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்- எவிடன்ஸ் கதிர்

  • 5
  • 0

மேலவளவில் கொலை செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 4 நாட்களாகத் தூக்கம் இல்லாமல் சாப்பிட முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதற்காக, கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்த கிராம பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற முருகேசன் உட்பட ஏழு பேரை வெட்டி படுகொலை செய்தது ஆணவ சாதி வெறி.  

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முருகேசன். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், தலைவரானதை அப்பகுதி ஆணவ சாதியினரால் (கள்ளர்) ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தேர்தலில் போட்டியிடும்போதே முருகேசனை ஆணவ சாதியினர் எதிர்த்துவந்தனர். அவர்களின் அடக்குமுறையை மீறி முருகேசன் வெற்றி பெற்றார். இந்நிலையில் முருகேசனும் அவரது சமூகத்தைச் சேர்ந்த 5 பேரும் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஊராட்சி வேலைக்காக மதுரை மேலூருக்குச் சென்றுவிட்டு பேருந்தில் ஊர்திரும்பிக் கொண்டிருந்தபோது ஆணவ சாதி வெறியர்கள், முருகேசனின் தலையைத் தனியாக வெட்டியெடுத்துச் சாதி வெறியைத் தீர்த்து, அந்த ஐந்து பேரையும் பேருந்திலேயே வெட்டி படுகொலை செய்தனர்.

இதனைக் கேள்வியுற்று மேலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரையும், அதேநாளில் படுகொலை செய்தனர் சாதி வெறியர்கள். தமிழக வரலாற்றின் அழிக்க முடியாத கறையாக இந்த மேலளவு கொலை படிந்திருக்கிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சிறைத் தண்டனை பெற்றுவந்த சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டி சாமி ஆகிய 13 பேரும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில் இந்த 13 பேர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் மேலவளவுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். இதுகுறித்து அவர், “மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 தலித்துகளைக் கொலை செய்த குற்றவாளிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். அரசின் இந்த நடவடிக்கை ஏற்புடையது அல்ல. அது மட்டும் அல்ல. விடுவிக்கப்பட்ட தண்டனை கைதிகளை ஆளும் கட்சியினரும் சாதி பிரமுகர்களும் சந்தித்து வருகிற கூத்தும் நடந்து வருகிறது. நேற்று மேலவளவு சென்று இருந்தேன். கொலை செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 4 நாட்களாகத் தூக்கம் இல்லாமல் சாப்பிட முடியாமல் தவித்து வருகிறோம். எங்களை யாரும் இதுவரை வந்து பார்க்கவில்லை என்றனர். இதில் கொடுமை என்னவென்றால் கொல்லப்பட்ட தலித்துகளின் மனைவிமார்கள் சாலைப் பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். எங்க வீட்டுக்காரரைக் கொன்ற ஆட்களை பார்க்கப்போகிற ஆளும் கட்சியினர் எங்கள் ஊரு வழியாகத்தான் காரில் போகின்றனர். அவர்கள் போவதற்காக நாங்களே சாலையைச் சுத்தப் படுத்துகிற வேலை செய்கிறோம் இந்த கொடுமை யாருக்கும் வரக் கூடாது என்றனர்.சட்ட ரீதியாக நீதி கிடைக்கத் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.


 

Leave Comments

Comments (0)