விசவாயு நிறைந்த கழிவுநீர் தொட்டிக்குள் மனிதரை இறக்கிவிட்டு கொலை செய்திருக்கிறது எக்ஸ்பிரஸ் அவென்யூ பேரங்காடி -ஜெயராணி

/files/detail1.png

விசவாயு நிறைந்த கழிவுநீர் தொட்டிக்குள் மனிதரை இறக்கிவிட்டு கொலை செய்திருக்கிறது எக்ஸ்பிரஸ் அவென்யூ பேரங்காடி -ஜெயராணி

  • 0
  • 0

மலக்குழி அடைப்பை நீக்க எந்திரத்தைப் பயன்படுத்தத் துப்பில்லாமல், விசவாயு நிறைந்த கழிவுநீர் தொட்டிக்குள் மனிதரை இறக்கிவிட்டு கொலை செய்தது, தென்னிந்தியாவின் இந்த நவீன வணிகப் பேரங்காடி என்று எழுத்தாளர் ஜெயராணி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஹாப்பிங் மாலின் கீழ் தளத்தில் உள்ள மலக்குழியில் அடைப்பு ஏற்பட்டதால் அதைச் சரிசெய்ய நேற்று (நவம்பர் 12)  காலை அருண்குமார், அவரது தம்பி ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் ஆகிய 5 துப்புரவு தொழிலாளிகள் சென்றுள்ளனர்.

மலகுழியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ரஞ்சித் குமார் விசவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது அண்ணன் அருண்குமார் உடனே மலக்குழியில் இறங்கி ரஞ்சித்தை காப்பாற்றினார். இதனையடுத்து அருண்குமார் மலக்குழியிலிருந்து வெளியில் ஏற முற்பட்டபோது விச வாயு தாக்கியதில் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைகாக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இச்சம்பவம் குறித்து எழுத்தாளர் ஜெயராணி, ”இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு சொந்தமான பேரங்காடி எக்ஸ்பிரஸ் அவென்யூ. 

• 1,750,000 சதுர அடிகளில் ரூ. 7,50 கோடி செலவில் கட்டப்பட்ட சென்னையின் மிகப்பெரிய பேரங்காடி.

• பத்து ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட நான்கடுக்கு மாடிக் கட்டிடத்தில் 210 வணிக அங்காடிகள், சொகுசு கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் நான்கு நட்சத்திர பொட்டிக் ஓட்டல்கள் உள்ளன.

• கால் வலிக்காமல் ஷாப்பிங் செய்ய 26 லிப்டுகள், 34 எஸ்கலேட்டர்கள் மற்றும் 4 ட்ராவெல்லேட்டர்கள் உள்ளன.

• 1500 கார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பைக்குகள் நிறுத்தும் பார்க்கிங் வசதியைக் கொண்டது.

• சர்வதேச ஃபேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பிராண்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

• 50 ஆயிரம் சதுர அடியில் உள்ளூர் முதல் உலகளவிலான உணவகங்களைக் கொண்ட ஃபுட் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது.

• 40 ஆயிரம் சதுர அடியில் சத்யம் சினிமாஸின் பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட எட்டு நவீனத் திரையரங்குகள் உள்ளன.

• தென் இந்தியாவிலேயே மிகப் பெரிய விளையாட்டு நடை வாணப்பந்தலின் தாயகமாக இது அமைந்துள்ளது. நூற்றுக்கான நவீன விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

• உலக அளவில் மிகவும், பிரபலமான இங்கிலாந்தைச் சார்ந்த நிறுவனமான ஹாம்லேஸ் (Hamleys) கடை இதனுள் அடங்கியுள்ளது.

ஆனால், மலக்குழி அடைப்பை நீக்க எந்திரத்தைப் பயன்படுத்தத் துப்பில்லாமல், விசவாயு நிறைந்த கழிவுநீர் தொட்டிக்குள் மனிதரை இறக்கிவிட்டு கொலை செய்தது, தென்னிந்தியாவின் இந்த நவீன வணிகப் பேரங்காடி. உங்கள் நவீனம் நாசமாய் போகட்டும்” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave Comments

Comments (0)