கச்சநத்தம் படுகொலை: ஜாமின் கோரிய மனு தள்ளுபடி

/files/detail1.png

கச்சநத்தம் படுகொலை: ஜாமின் கோரிய மனு தள்ளுபடி

  • 0
  • 0

கச்சநத்தத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்கள் என்பதற்காக 3 பேரைக் கொலை செய்த சாதிவெறியர்கள் கோரிய ஜாமினை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்கள் என்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆணவ சாதியினர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கினர். இதில் சண்முகநாதன், ஆறுமுகம், சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 6க்கும் மேற்பட்டோருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த கச்சநத்தம் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய அக்னி ராஜா(22), சந்திரகுமார், இவரது மகன்கள் சுமன், அருண் என்ற அருண்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர். அவர்கள் நான்கு பேரும் சிறைத்தண்டனை பெற்றுவரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். 

அந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 25ஆம் தேதி நீதிபதி பார்த்திபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில்,  இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ‘இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது. சாதி உள்நோக்கத்துடன் முன்கூட்டியே சதிசெய்து திட்டமிட்டு நடைபெற்ற குற்றச்சம்பவம் இது.  மூன்று பேரின் உயிரிழப்பு, ஐந்து பேரின் படுகாயங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, இந்த வழக்கில் இவர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது` என்று உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.

Leave Comments

Comments (0)