கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காகத் தலித் இளைஞன் மீது அரிவாள் வெட்டு

/files/detail1.png

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காகத் தலித் இளைஞன் மீது அரிவாள் வெட்டு

  • 1
  • 0

 

தேனி மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காக அவரை ஆணவ சாதியினர் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ளது கோடாங்கிப்பட்டி. இந்த கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், தேவர் சாதியைச் சேர்ந்தவர்களும், இன்னும் பிற மற்ற சாதியைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அருந்ததியர் தெருவில் வசித்துவரக்கூடிய சுந்தர் என்பவர் தன் வீட்டின் முன்பு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கண்ணன், மனோஜ் ஆகிய இருவரும் ”எங்கள் முன்னரே திமிராகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறாய். சக்கிலி பய உனக்கு அவ்வளவு தைரியமா” என அரிவாளை எடுத்துவந்து சுந்தர் மீது சரமாரியாக வெட்டியுள்ளனர். கண்ணன், மனோஜ் ஆகிய இருவரும் தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த சுந்தரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் அங்குச் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதனையடுத்து தலித் சமூகத்தைச் சேர்ந்த சுந்தர் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று  பிசி பட்டி காவல்நிலையத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் கடந்த ஆண்டு மே மாதம் சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்கள் என்பதற்காக  ஆணவ சாதியினரால் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)