புத்தகமாக உயிர்வாழ்வார் பதிப்புலகின் ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன்

/files/crea-2020-11-18-19:59:23.jpg

புத்தகமாக உயிர்வாழ்வார் பதிப்புலகின் ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன்

  • 13
  • 0

ஒவ்வொரு புத்தகமும் அழகாய் சிரிக்கிறது என்றால் அதற்குப் பின்னே அதை மலரச் செய்து தன்னை வருத்திக் கொண்ட பதிப்பாசிரியரின் கண்ணீர் நிச்சயம் ஒளிந்திருக்கும். படைப்புலகம் என்பதே கடினம் நிறைந்ததுதான் பொழுதுபோக்கை, வெற்றுக்கூச்சலை மட்டுமே சிலாகிக்கும் தற்கால தலைமுறைக்கு மத்தியில் கருத்தாழம்மிக்க புத்தகங்களை பதிவிட்டு வெளியிடுவது என்பது எத்தகைய சிரமத்தை கொடுக்கும் என்றாலும் அதை சிரமமாக எண்ணாமல் எதிர்கால தலைமுறையை பண்படுத்த நாம் செய்யும் பணி, நம் கடமை என்று எண்ணி அரை நூற்றாண்டு காலம் தமிழ் உலகில் களம் கண்டவர் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள். உலகம் முழுவதும் பல இழப்புகளை ஏற்படுத்திய கொரோனா படைப்புலகையும் விட்டுவைக்கவில்லை, கடந்த 20 நாட்களாக கொரோனா தொற்றால் மூச்சுக் கூட சரியாக விட முடியாத கடின நேரத்திலும் தனது புதுப்பிக்கப்பட்ட தமிழ் அகராதியை வெளியிட்டார் அவர் அர்ப்பணிப்பை என்னவென்று சொல்வது.! புத்தகங்கள்தான் மனிதவாழ்வில் அறத்தை, பகுத்தறிவை, முற்போக்கு சிந்தனையை, மனித மாண்புகளை எடுத்துக்காட்டி அவைகளை சீர்தூக்கி மனிதனை பண்படுத்தப் பயன்படும் மகத்தான மருந்து. அந்த மருந்தை கொடுக்கக்கூடிய பதிப்பாளர்களுக்கு கொள்ளை லாபம் எல்லாம் கிடைப்பதில்லை, அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை, மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கோடு இப்பணிக்கு வரும் ஐந்து ரூபாய் மருத்துவரின் நிலைதான் அவர்களுக்கும். அதுவும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் பணிகளை மட்டுமே முன்னிறுத்தும் செயல்பாடுகளை வார்த்தைகளால் நம்மால் சொல்லிவிட இயலாது அப்படிப்பட்ட நபர்களில் ஒருவர் தான் க்ரியா ராமகிருஷ்ணன்.


தனது கல்லூரி வாழ்வை சென்னை லயோலா கல்லூரியில் தொடங்கியவர், ஆரம்பத்தில் விளம்பரத் துறையில் பணியாற்றினார். அதன்பிறகு தமிழில் தரமான படைப்புகளை தர வேண்டும் என்கின்ற நோக்கில் 1974 ஆம் ஆண்டில் க்ரியா பதிப்பகத்தினை துவங்கினார். சுந்தர ராமசாமியின் 'ஜே ஜே சில குறிப்புகள்' அம்பை எழுதிய 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' இமயத்தின் 'கோவேறு கழுதைகள்' பூமணியின் 'அஞ்ஞாடி' ந.முத்துசாமியின் 'மேற்கத்தி கொம்பு மாடுகள்' உள்ளிட்ட மிகச்சிறந்த புனைவுகளையும் ஆல்பெர் காம்யுவின் 'அந்நியன் ' காப்காவின் 'விசாரணை' எக்ஸ்பரியின்' குட்டி இளவரசன்' போல சிறந்த மொழிபெயர்ப்புகளையும் இவரது மேற்பார்வையில் க்ரியா வெளியிட்டது. ஐராவதம் மகாதேவன் ஆய்வு நூலான Early Tamil Epigraphy From The Earliest Times to The Sixth century A.D புத்தகத்தை ஹாவர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது இவருடைய சாதனைகளில் ஒன்று. சென்னையில் உள்ள ஆய்வு நூலகமான ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தை உருவாக்கியதிலும் இவர் பங்கு வகித்தார். அவர் உருவாக்கி, செம்மைப்படுத்திய தனது தமிழ் அகராதியை வெளியிட்ட சில நாட்களிலேயே அவர் தனது 76 ஆவது வயதில் மரணத்தை தழுவிக்கொண்டார்.


ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் கொண்ட சொல்லகராதியை நமக்கு கொடுத்து சென்ற பொக்கிஷம் தான் அவர். 1989இல் மொழி அறக்கட்டளை ஆரம்பித்ததில் இருந்து இறக்கும் வரை பதிப்புத் துறையில் தொழில்நுட்ப ரீதியாக, மொழி ரீதியாக பண்பாட்டு ரீதியாக புதிய, புதிய அம்சங்களை கொண்டுவந்தார். உலகம் முழுவதுமே பண்பாடு, அறிவு, கலை ரீதியான முயற்சிகள் எல்லாம் ஒரு நூலில் தான் தொங்குகின்றன. அந்த நூல் மிகச்சிறந்த ரசனை, புரிதல், கற்பனையை நிஜத்திலும் சாதிக்கும் வல்லமை கொண்ட சிலரிடம் தான் இருக்கின்றது. அப்படிப்பட்டவர்களில் அந்த சிலரில் ஒருவர் தான் க்ரியா ராமகிருஷ்ணன் என்று பல ஆய்வு நூல்களை வெளியிட்ட இஸ்ரேலிய பேராசிரியர் டேஷன் ஷெல்மன் கூறுகிறார். அப்படி புத்தகம் சமத்துவம், சமூக நீதி, சனநாயகம் காக்க கூடிய ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும் அதுவே அறமாகவும், அதுவே மனித மாகவும் இருக்கும். அப்படித்தான் தலித் இலக்கியத் துறையிலும், சர்வதேச நூல்களை மொழியாக்கம் செய்வதிலும், 40 ஆண்டுகளை தாண்டியும் தொடர்ந்து பதிப்புத்துறையில் தனது பணியை சிறப்புற செய்து வந்தார். க்ரியாவின் புத்தகங்களை புரட்டி நாம் வாசிக்கும் போது அவருடைய மூச்சுக்காற்றையும் கொஞ்சம் சுவாசிக்கலாம்..

Leave Comments

Comments (0)