எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத் தீர்ப்பு: வடமாநிலங்களில் ரத்தம் சிந்தி இறந்துபோன தோழர்களின் ரத்ததிற்கு கிடைத்த நீதி

/files/detail1.png

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத் தீர்ப்பு: வடமாநிலங்களில் ரத்தம் சிந்தி இறந்துபோன தோழர்களின் ரத்ததிற்கு கிடைத்த நீதி

  • 0
  • 0

 

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளனர். இதுகுறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், ”இன்றைய நாள் வரலாற்றில் முக்கியமான ஒரு நாள். மனித உரிமை செயற்பாட்டாளர் என்கிற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளான கோயல், லலித் ஆகிய இருவரும் கொடுத்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த தீர்ப்பில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், அதனால் இனிமேல் விசாரணை செய்துவிட்டுதான் வழக்கினை பதிவு செய்யவேண்டும் என்றும், விசாரணை செய்துவிட்டுதான் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்றும் கூறி அந்த சட்டத்திற்கு எதிரான ஒரு தீர்ப்பினை கொடுத்திருந்தார்கள். மத்திய அரசு இதனை எதிர்த்து ஒரு சீராய்வு மனுவினை தாக்கல் செய்தது. அதன் விளைவாக 2018ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட அந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இனிமேல் வழக்குப் பதிவு செய்யலாம். வழக்குப் பதிவு செய்துவிட்டு குற்றவாளிகளைக் கைது செய்யலாம். விசாரணை செய்துவிட்டுதான் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை. விசாரணை செய்துவிட்டுதான் குற்றவாளியைக் கைது செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதுதான் இந்த தீர்ப்பின் முக்கியமான சாரம்சம்.

நீதிபதிகள் கோயல், லலித் ஆகிய இருவர் அளித்த தீர்ப்புக்கு எதிராக இந்தியாவில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. குறிப்பாக வட இந்தியாவில். லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அதில் 10, 11 பேர் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதன் விளைவாகத்தான் மத்திய அரசுக்கு மிகப் பெரிய அழுத்தம் ஏற்பட்டது. அதனால்தான் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  நீதிபதிகள் கோயல், லலித் ஆகிய இருவர் அளித்த தீர்ப்பு அபாயகரமானது. மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தின் வழக்கை உதாரணமாக எடுத்துக்கொண்டு ஒரு பொதுக் கருத்தினை சொல்லியிருந்தார்கள்.

alt text

தமிழ்நாட்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் அதிலும் காவல்துறையினர் திறம்பட விசாரணை செய்வது கிடையாது. குற்றவாளிகளைக் கைது செய்வது கிடையாது. சாட்சிகளைக் கண்டுபிடிப்பது கிடையாது. இதுபோன்ற இந்த சட்டத்தில் பல பிரச்னைகள் இருக்கிறது.

இந்த சட்டம் சரியாகச் செயல்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது. அந்த குழு ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூடி, எத்தனை வழக்குகள் நீதிமன்றத்திலும், காவல்நிலையத்திலும் நிலுவையில் உள்ளன என்று மதிப்பாய்வு செய்யவேண்டும். அந்த குழுவின் தலைவர் நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 23 ஆண்டுகளில் 46 முறை இந்த குழு கூடியிருக்கவேண்டும். ஆனால் இதுவரை வெறும் மூன்று முறை மட்டுமே இந்த குழு கூடியிருக்கிறது. இந்தியாவில் இந்த சட்டம் சரியாகச் செயல்படுத்தவில்லை என்று நாம் கொந்தளித்து இருந்தோம். இது எவ்வளவு மோசமான ஒரு தீர்ப்பாக இருக்க முடியும்.

ஆனால் அந்த தீர்ப்பை இன்று நீதிபதிகள் திரும்பப் பெற்றுக்கொண்டனர். வேறு வழியில்லை. ஒரே ஒரு வழக்கை உதாரணமாக எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த சட்டத்திற்கும் வேட்டு வைக்கிற அளவிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பைக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்த உத்தரவு இன்று திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வடமாநிலங்களில் ரத்தம் சிந்தி இறந்துபோன தோழர்கள், தலித் செயற்பாட்டாளர்கள், தலித் மக்கள். அவர்களின் ரத்ததிற்கு கிடைத்த நீதியாகதான் இதை நான் பார்க்கிறேன். அந்த ஒரே ஒரு சட்டம்தான் தலித் மக்களை வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கக்கூடிய சட்டமாக இருக்கிறது. அதையும் அரசு பறிக்கப்பார்த்திருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு எதிராகத் தீர்ப்பு கொடுத்தால் அந்த தீர்ப்புத் தானாகவே திரும்பப் பெறக் கூடும் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு இது ஒரு பாடம்” என்று தெரிவித்துள்ளார்.
 

Leave Comments

Comments (0)