குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

/files/detail1.png

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

  • 0
  • 0

 

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 09ஆம் தேதி இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர்,  பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது. ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தாது” என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில்  போராட்டம் வலுப்பெற்றுள்ளது. போராடும் மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்தும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கண்டன குரல்களை எழுப்பி அவர்களின் உருவபொம்மைகளை எறித்தனர்.

இதனையடுத்து போராட்டம் நடத்தியதற்காக 45 மாணவிகள் உட்பட 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 

Leave Comments

Comments (0)