லாபத்தில் இயங்கும் இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு - மே 17 இயக்கம்

/files/detail1.png

லாபத்தில் இயங்கும் இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு - மே 17 இயக்கம்

  • 1
  • 0

மத்தியில் பிஜேபியின் மோடி அரசு பதவியேற்ற நாளிலிருந்து லாபத்தில் இயங்கும் பல்வேறு அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் வேலையைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது பிஜேபியின் மோடி அரசு என்று  மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வியக்கத் தோழர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அடுத்து இரயில்வே துறையைத் தனியார் மயமாக்க மோடி அரசு தீவிர வேலையில் தற்போது இறங்கியிருக்கிறது.

அதன்படி இரயில்வே துறையின் துணை நிறுவனமான இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் 100 பங்குகளில் 12.6% பங்குகளை, ஒரு பங்கு 315 மற்றும் 320 என்ற விலையில் மொத்தம் 2 கோடி பங்குகளாகப் பிரித்து விற்க மத்திய அரசு முடிவு செய்து, விற்றும் விட்டது. இதன் மூலம் இரயில்வேக்கு 635 கோடி ரூபாய் நிதி வரும் என்றும் அரசு கூறுகிறது. ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் ஏற்கனவே லாபத்தில்தான் இயங்கி வருகிறது. 2018 நிதியாண்டில் 220 கோடியும், 2019 நிதியாண்டில் 272 கோடியும் லாபம் ஈட்டிய நிறுவனம். அந்நிறுவனத்தின் பங்குகளைச் சந்தையில் விற்கிறோமென்று சொல்லும் மத்திய அரசின் நோக்கம் இரயில்வே துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையின் தொடக்கமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதுமட்டுமில்லை மத்திய அரசின் சமீப நடவடிக்கைகள் அனைத்தும் அதை உறுபடுத்திபடுத்தும் விதமாகவே இருக்கிறது. ஏனென்றால் இரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், இரயில் இந்தியா டெக்னிக்கல் மற்றும் எகனாமிக் சர்வீஸ் மற்றும் இரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றின் பங்குகளையும் ஏற்கனவே பங்குச்சந்தையில் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தோடு இரயில்வேயின் 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களைத் தனியார் நிறுவனங்கள் இரயில் இயக்கிக்கொள்ள ஒப்புதல் கடந்த ஆகஸ்டு 31, 2019அன்று மத்திய அரசால் வழங்கப்பட்டு ஒப்பந்தங்கள் சரிபார்க்கும் வேலைகள் மிக விரைவாக நடந்து வருகிறது. இதற்கு முன்னோட்டமாகத்தான் லக்னோ-டெல்லி இடையேயான தேஜெஸ் இரயில் வழித்தடத்தைச் சமீபத்தில் தனியாருக்குக் கொடுத்திருக்கிறது மத்திய அரசு.

ஒரு வழித்தடமென்பது ஏதோ ஒரே நாளில் அதுவாக அமைத்த ஒன்றல்ல. பல ஆயிரம் மக்கள் தங்களது நிலங்களைக் கொடுத்து உதவிய பின் தான் வழித்தடமென்பது சாத்தியமானது. அதை ஏதோ ஒரு தனியாரின் லாபத்திற்காக விற்பதென்பது அந்த நிலம் கொடுத்த மக்களை ஏமாற்றும் செயலே ஆகும். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இரயில்வேயின் 3500 சதுரகீலோமீட்டர் வழித்தடத்தைச் சீரமைக்க 3500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. ஒருவேளை தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை எடுத்தபின் அதனைச் சீரமைத்து அவர்களுக்குக் கொடுக்கத்தான் மத்திய அரசு இவ்வளவு கோடியை அறிவித்ததா?

மேலும் வழித்தடத்தை எடுத்த தனியார் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரயில் பெட்டிகளைத்தான் பயன்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் எல்லாம் இல்லையாம். வெளிநாடுகளிலிருந்தும் வாங்கிக்கொள்ளலாமென்று அரசு அறிவித்திருக்கிறது. இதுவரை இந்தியாவில் இயக்கப்படும் இரயில்களை இந்தியாவிலேயேதான் தயாரித்துக்கொண்டு இருக்கின்றோம். இதனால் இந்த தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுப் பயனடைந்து வந்தனர். இப்போது மத்திய அரசு எடுக்கிற இந்த நடவடிக்கையால் அவர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். ஏற்கனவே பல லட்சம் பேர் வேலையிழப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிற சூழலில் மேலும் பல்லாயிரம் பேரைத் திட்டமிட்டு வேலையில்லாமல் செய்கிறது மோடி அரசு.

ஆக மத்திய பிஜேபி மோடி அரசின் திட்டமிட்ட இத்தகைய நகர்வுகள் என்பது லாபத்தில் இயங்கும் இரயில்வே துறையைத் திட்டமிட்டு மெல்ல மெல்லத் தனியாருக்கும் தாரைவார்க்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave Comments

Comments (0)