போரில் கொலைதான் முக்கியம் என்று போதிப்பதுதான் பகவத்கீதை- எழுத்தாளர் மதிமாறன்

/files/detail1.png

போரில் கொலைதான் முக்கியம் என்று போதிப்பதுதான் பகவத்கீதை- எழுத்தாளர் மதிமாறன்

  • 1
  • 0

போரில் கொலைதான் முக்கியம் என்று போதிப்பதுதான் பகவத்கீதை. இது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானது என்று எழுத்தாளர் மதிமாறன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பில் பகவத்கீதை பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலின் (AICTE)உத்தரவின் பேரில் பகவத்கீதை விருப்பப் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் 3-வது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியுள்ளன. இதற்கு மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

இதுகுறித்து எழுத்தாளர் மதிமாறன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “போரில் கொலைதான் முக்கியம் என்று போதிப்பதுதான் பகவத்கீதை. இது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானது. பிரிவினையைப் போதிக்கிற இந்து சமூகத்திலேயே ஒற்றுமையின்மையைப் போதிக்கிற பகவத்கீதையை பாடத்தில் வைப்பது நியாயம் என்று எப்படிச் சொல்லமுடியும். பகவத்கீதையில் ’நானே நான்கு வர்ணத்தை உருவாக்குகிறேன். எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, எங்கெல்லாம் தர்மம் அழிகிறதோ அங்கெல்லாம் நான் வருவேன்’ என்று கண்ணன் சொல்வதாகச் சொல்கிறார்கள் அல்லவா? இதைப் பார்க்கும்போது பரவாயில்லை இது நியாயமாக இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இங்கு எது தர்மம் எது அதர்மம் என்கிற கேள்வி இருக்கிறது. 

நானே நான்கு வர்ணத்தை உருவாக்குகிறேன் என்று சொன்ன கண்ணன் இந்த நான்கு வர்ண முறை மாறுபடும்போது அது அதர்மம் அதுதான் தர்மம் என்கிறார். கீழ் வர்ண காரர்கள் கல்வி பெற மேல் வர்ணத்திற்குச் செல்ல முயற்சிக்கும்போது அழித்தொழிப்பதுதான் தர்மம் என்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி கொடுத்த ஜோதி பாய் பூலே, சாவித்திரி பூலே, அம்பேத்கர், காமராஜர் குறித்த பாடங்கள் வையுங்கள். கல்வி எவ்வளவு சிறப்பானது, அது எப்படி மறுக்கப்பட்டது என்பது குறித்த பாடங்களை வையுங்கள். அது பயனுள்ளதாக இருக்கட்டும். 

பகவத்கீதையை பாடத்திட்டத்தில் கொண்டுவருவது நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்ததோ அதே நிலைக்கு கொண்டுபோகத்தான். கீழடி ஆய்வு, பகவத்கீதையை அண்ணா பல்கலைகழக பாடத்திட்டத்தில் வைப்பது என இது இரண்டிற்கும் தொடர்பு இருப்பதாகக் கருதுகிறேன். கீழடி ஆய்வு மகாபாரதம், இராமாயணம், பகவத்கீதை, தேவாரம், திருவாசம் என அத்தனையையும் புறக்கணிக்கிறது. எந்த சமயமும் தமிழரின் பின்னணியில் இல்லை, அடையாளம் இல்லை என்று கீழடி ஆய்வு உயர்ந்து நிற்கும்போது தேவாரம், திருவாசம் பெரியபுராணத்தை வைத்தாலே எதிர்ப்போம். தமிழ் விரோதமாக இருக்கிற பகவத்கீதையை சமஸ்கிருதத்தோடு வைக்கிறீர்கள் என்றால் வேடிக்கை பார்க்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.

Leave Comments

Comments (0)