தீண்டாமைச் சுவர் அமைத்த ஆதிக்க இடைநிலைச் சாதியினரைக்  கைது செய்யவேண்டும்- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

/files/detail1.png

தீண்டாமைச் சுவர் அமைத்த ஆதிக்க இடைநிலைச் சாதியினரைக்  கைது செய்யவேண்டும்- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

  • 1
  • 0

 

தீண்டாமைச் சுவர் அமைத்த ஆதிக்க இடைநிலைச் சாதியினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்க தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,”கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஏ. டி காலனி பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த விளிம்புநிலை மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு அருகில் தனியார் துணிக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் தொடர்பைத் துண்டிப்பதற்காக ஆதிக்க இடைநிலைச் சாதியினர் பணம் வசூலித்து 20 அடி உயரத்தில் ஒரு தீண்டாமை சுவர் கட்டப்பட்டதாகவும், அந்தச் சுவற்றில் ஆதிக்க இடைநிலைச் சாதியினரின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் தவிர மற்றவர்கள் நுழையக் கூடாது என்று எழுதி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அந்தச் சுவர் தரமற்ற முறையில் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்ததாகவும் ஆங்காங்கே விரிசல் விட்டிருக்கிறது எனவே அதனைச் சரி செய்யுங்கள் என்று வீட்டு உரிமையாளரிடமும், காவல்துறையிடமும் பல முறை மனு கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தொடர் மழையின் காரணமாக இந்தச் சுவர் இடிந்து அருகிலிருந்த குடியிருப்பின் மீது விழுந்துள்ளது. குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட17ப் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை அறிந்து வந்து அங்கே நீதி கேட்டும் உரியவர்களைக் கைது செய்யக் கோரியும் அமைதியான முறையில் போராடிய தமிழ்ப்புலிகள்கட்சி, சாதி ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களோடு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை உரியவர்களைக் கைது செய்யாமல் நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது வன்முறையை நிகழ்த்தி கைது செய்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் காவல்துறை நடத்திய இந்த தாக்குதலையும், கைதையும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட துணிக்கடை உரிமையாளரை உடனடியாக கைது செய்து உரிய விசாரணை நடத்து! தீண்டாமைச் சுவர் அமைத்த ஆதிக்க இடைநிலைச் சாதியினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்! நீதி கேட்டுப் போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்! இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடு! ஏ.டி காலனியில் வாழும் ஒடுக்குண்ட மக்களுக்குப் பாதுகாப்பான வீடு கட்டிக் கொடு! வீடுகட்ட ஆகும் செலவு மற்றும் இழப்பீடு தொகையினை குற்றவாளிகளிடம் தண்டமாக பெற்றிடு! உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போராடியவர்களைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்! தமிழகமெங்கும் இது போன்ற தீண்டாமை சுவர்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய ஒரு சிறப்புக்குழு ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடு!” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave Comments

Comments (0)