தலித் பெண்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்த ஆணவ சாதியினர்

/files/detail1.png

தலித் பெண்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்த ஆணவ சாதியினர்

  • 0
  • 0

புலந்த்ஷாரில் உள்ள ராகேடா கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைக் கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர் ஆணவ சாதியைச் சேர்ந்த சில ஆண்கள்.

புலந்த்ஷாரில் உள்ளது ராகேடா கிராமம். இந்த பகுதியில் உள்ள கோவிலுக்குக் கடந்த 25ஆம் தேதி, தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் குழுவாகச் சென்றுள்ளனர். அதைப் பார்த்த தாகூர் சாதியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், அந்த பெண்களைக் கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவந்தது.

”நாங்கள் கோவிலுக்குள் சென்றுவிட்டு சாமியைக் கும்பிட்ட உடனே வந்துவிடுகிறோம் என்று அந்த பெண்கள் தாழ்வாகக் கேட்பதும், இது தாகூர் சாதியைச் சேர்ந்த மக்களின் கோவில், அதனால் நீங்கள் இங்குப் பிரார்த்தனை செய்யமுடியாது” என்று அந்த ஆண்கள் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் “நாங்களும் மனிதர்கள் தானே. எங்களுக்கும் இதயம் இருக்கிறது” என்ற வாசங்களை எழுப்பினர்.

இதனையடுத்து இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கின்றனர்.

”நாங்கள் நீண்ட காலமாக அந்த கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் தற்போது சில ஆணவ சாதி ஆண்கள் எங்களை நுழையவிட மாட்டிகிறார்கள்” என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

“சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் இங்குச் சாதிப் பாகுபாடு நிலவுவது வெட்கக் கேடான விசயம்” என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த விஜேந்தர் சிங் வால்மீகி. 

Leave Comments

Comments (0)