தலித் செயற்பாட்டாளர் மீது ஆணவ சாதியினர் தாக்குதல்

/files/detail1.png

தலித் செயற்பாட்டாளர் மீது ஆணவ சாதியினர் தாக்குதல்

  • 0
  • 0

குஜராத்தில் தலித் மக்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிவந்த செயல்பாட்டாளர் மீது ஆணவ சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குஜராத் மாநிலம், கடதா வட்டத்தில் உள்ள கோபாலா கிராமத்தைச் சேர்ந்தவர் அமித்பாய் ஜெரம்பாய் பர்மர். தலித் செயற்பாட்டாளரான இவர், அம்மாநிலத்தில் தலித் மக்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறார். அந்த பகுதியில், இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தலித் மக்கள் தாக்கப்படுவது ஐந்தாவது முறை. இதற்கு எதிராகத் தொடர்ந்து பர்மர் குரல் கொடுத்துவந்ததால், அவர் மீது கோபத்திலிருந்து வந்துள்ளனர் ஆணவ சாதியினர்.

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டுக்குக் சென்றுகொண்டிருந்த பர்மரை ஆணவ சாதியைச் சேர்ந்த 3 பேர் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

பலத்த காயமடைந்த பர்மர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கை, கால்களில் உள்ள எலும்புகள் சேதமடைந்ததால், வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக காத்திருக்கிறார்.

இதனையடுத்து காவல்நிலையத்தில் இது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

”என்னைக் கொலை செய்துவிடுவதாக அவர்கள் பலமுறை மிரட்டினார்கள். கையில் துப்பாக்கி ஏந்தி தனது வீட்டிற்கு வந்த ஆணவ சாதியினர் என்னையும், எனது குடும்பத்தாரையும் மிரட்டினர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்தவித பாதுகாப்பும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை” என்று கூறினார் பர்மர். 

Leave Comments

Comments (0)