வேலை செய்த ஊதியத்தைக் கேட்ட பழங்குடியின பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை

/files/detail1.png

வேலை செய்த ஊதியத்தைக் கேட்ட பழங்குடியின பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை

  • 0
  • 0

தெலுங்கானாவில் வேலை செய்த ஊதியத்தைக் கேட்ட பழங்குடியின பெண்ணை மூன்று நாட்களாக வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் ஆணவ சாதியினர்.

பிரசாத் ரெட்டி என்பவர் நாகர்கர்னூலில் இருந்து புலம் பெயர்ந்த மக்களைத் தனது கோழிப்பண்ணையில் தொழிலாளர்களாக அமர்த்தி வேலை வாங்கிவருகிறார். அங்குதான் 30 வயது மதிக்கத்தக்கப் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும், அவரது கணவரும் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் சேர்த்து மாதம் 15,000 சம்பளம் கொடுக்கிறார் பிரசாத் ரெட்டி.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாகப் பழங்குடியின பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் சம்பளம் வழங்கவில்லை. இதனால் அவர்கள்  சம்பளத்தைக் கேட்டு பிரசாத் ரெட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, `நீங்கள் இருவரும் பண்ணைக்கு வாருங்கள் சம்பளம் தருகிறேன்` என்று இருவரையும் பண்ணைக்கு வரவழைத்து செப்டம்பர் 18ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை தனித் தனி அறையில் அடைத்துவைத்து,  அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதே நேரத்தில் மற்றொரு அறையில் இருக்கும் அவரது கணவரைக் கடுமையாகத் தாக்கியும் சித்ரவதை செய்துள்ளனர்.

இதனையடுத்து 21ஆம் தேதி இருவரும் அங்கிருந்து தப்பித்துவந்து காவல்துறையை அணுக முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையில் தெரிவித்தால் கொலை செய்துவிடுவோம் என்று பிரசாத் ரெட்டியின் ஆட்கள் மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 26ஆம் தேதி பஹாடி ஷரீஃப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் முச்சா பிரசாந்த் ரெட்டி (30), முச்சா அனில் ரெட்டி (26), ஆர்.பாரத் (26), தேவர்ஷெட்டி பவன் குமார் (29), சி.ஹன்மந்து (25) ஆகியோர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்படப் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

Leave Comments

Comments (0)