தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரக் கொலை

/files/detail1.png

தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரக் கொலை

  • 0
  • 0

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வன்னியர் சாதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆன்டிசிறுவள்ளூரை சேர்ந்தவர் ரோஜா. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரும், காரை கிராமத்தில் வசித்துவரக்கூடிய வன்னியர் சாதியைச் சேர்ந்த ராஜேஷும் இரண்டு வருடங்களாகக் காதலித்துவந்துள்ளனர். ஆனால் ராஜேஷுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில் அதை மறைத்து ரோஜாவுடன் பழகிவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி ராஜேஷ் திருமணம் செய்துகொள்வதாக ரோஜாவை அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 26ஆம் தேதி ராஜேஷ் ரோஜாவின் தம்பியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, “உன் அக்காவை சிறுவாக்கம் புதுரோடு அருகில் விட்டுவிட்டேன். தலித் சமூகத்தைச்  சேர்ந்த பெண்ணை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது” என்று சொல்லிருக்கிறார். ஆனால் அங்குச் சென்று பார்த்தால் ரோஜாவைக் காணவில்லை. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையின் ரோஜாவைத் தேடிவந்த நிலையில்,  சிறுவாக்கம் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் உடல் முழுவதும் காயங்களுடனும், சிகரெட்டால் சுடப்பட்ட கொப்புளங்களுடனும் தூக்கில் தொங்கியவாறு ரோஜாவின் உடல் மீட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ரோஜாவைக் கொலைசெய்த கொலையாளி ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால் காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.

கொலையாளி ராஜேஷை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர்களும், மக்கள் மன்ற தோழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

Leave Comments

Comments (0)