நடூரில் இறந்த உயிர்களுக்கான நீதி எங்கே?  நடூரில் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்!

/files/fdh-2020-12-02-13:23:58.jpg

நடூரில் இறந்த உயிர்களுக்கான நீதி எங்கே?  நடூரில் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்!

  • 93
  • 0

-பாரதி ப்ரதீப்


உலகின் மிகநீண்ட சுவர் எதுவெனக் கேட்டால் நம் யோசிக்காமெலேயே சொல்லிவிடுவோம், அது  சீனப்பெருஞ்சுவர் என்று ஆனால் உண்மையில் அதைவிட நீளமான சுவரொன்று இந்தியாவில் நெடுங்காலமாக  இருந்துக்கொண்டிருக்கிறது அது  நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கும் அளவுக்கு வேறொன்றுமில்லை. 


பார்த்தால் தீட்டு; கேட்டால் தீட்டு; கண்டாலும் தீட்டென சாதியப்படிநிலை சமூகம் தன் சாதிவெறியை நிலைநாட்ட காலங்காலமாக மனிதத்தன்மையற்று தலித்துகளை புறந்தள்ள ஊர்த்தெரு சேரியென பிரித்து வைத்திருப்பதைப்போல தலித்துகளின் வாழ்விடங்களை தடுத்து  எழுப்பப்பட்ட தீண்டாமைச்சுவர்களே  அவை! 


இந்தியாவெங்கும் கணக்கெடுத்தால் லட்சக் கணக்கில் அதன் எண்ணிக்கை நீளும், கடைசியாக ட்ரம்ப் வருகையின் போது ஏழைகள் வாழும் பகுதிகளை மறைத்து எழுப்பப்பட்ட சுவர்கள் வரை அதன் பட்டியல் நீண்டுக்கொண்டேயிருக்கிறது.



திசம்பர் 2   சரியாக ஒராண்டுக்கு(2/12/2019) முன் இதேநாளில்  கோவை மேட்டுப்பாளையம் நடூரில் சுவரிடிந்து 17 பேர் இறந்த செய்தியும் இரவோடு இரவாக அரசே  இறந்தவர்களின் உடல்களை உறவினர்களுக்குக்கூட தெரியப்படுத்தாமல்  எரித்ததும்   நம் நினைவுக்கு வரக்கூடும். 


நடூரில் சக்கரவர்த்தி துகில் மாளிகை என்ற ஆயத்த ஆடையக உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டினது 20 அடி உயர சுற்றுச்சுவரிடிந்து 11 பெண்கள்,3 குழந்தைகள் ,3 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். முதலில் இந்த செய்தி வெளியான போது மழை பாதிப்பால் சுவரிடிந்து 17 பேர் இறப்பு என்றே செய்திகள் வெளியாயின, நாமும் எத்தனையே சுவரிடிந்து வீடிடிந்து இறந்தவர்களைப்போல இவர்களுக்கும் என உச்சு கொட்ட தயாராகிக்கொண்டிருந்தோம் ஆனால் அப்போது தான் அப்பகுதி மக்களின் குரலைக் கேட்க நேர்ந்தது. தாயை ,தந்தையை பிள்ளைகளை என உறவுகளை இழந்த அந்த நொடியிலும் அங்கே பார்வையிட வந்த எம்.ஏல்.வை முற்றுகையிட்டனர். சுவர் எழுப்பப்படும் போதே அரசு அதிகாரிகளிடம், அரசியல்வாதிகளிடம் என மனு அளித்த போது கண்டுக்கொள்ளாத நீங்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள் என்று குரலெழுப்பிய போதுதான் தெரியவந்தது இது வெறும் விபத்தல்ல அரசு கைகட்டி நடத்திக்காட்டிய கூட்டு வன்முறை என்று!



அப்போது தான் தொடங்கியது இடிந்தது வெறும் சுவரே தான், தீண்டாமைச்சுவரல்ல! ஏன் சுவருக்கும் சாதி அடையாளம் பூச வேண்டிய தேவை என்ற நடுநிலையாளர்களின் கேள்விகள் ஆனால்  உண்மையில் நடூரில் எழுப்பப்பட்டிருந்தது ஆதிக்கசாதி வெறியில் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர் தான். நடூரில் துகில்மாளிகை உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டிற்கும் அருகில் உள்ளது அருந்ததிய சமூகத்து மக்கள் வாழும் பகுதி அந்தப்பகுதி மக்கள் பலசமயங்களில் சிவசுப்பிரமணியத்தின் வீடிருக்கும் பகுதிவழியே பிரதான சாலைக்கு சென்று வந்திருக்கிறார்கள் இந்த நிலையில்தான் அருந்ததியர்கள் வாழும் பகுதியை மறைத்து எழுப்பப்பட்டது தீண்டாமைச்சுவர். மேலும் அந்த வீட்டின் சுற்றுச்சுவர் மற்ற இடங்களில் 5 அடி மட்டுமே எழுப்பப்பட்டிருந்த நிலையில் அருந்ததியர்கள் வாழும் பகுதியில் மட்டும் 20 அடி வரை உயர்த்தப்பட்டிருந்தது என்பதே நமக்கு வெட்டவெளிச்சமாய் தீண்டாமைச்சுவர் தான் என்பதை உணர்த்துகிறது.


சுவர் எவ்வித அடிக்கட்டுமானமும்( concrete pillars) இல்லாது வெறும் பாறைக்கற்களால் எழுப்பப்படும் போதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர் ஆனால் அரசோ அவ்வீட்டின் உரிமையாளரோ அதை ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை அவர்கள் மனங்களில் தேங்கியிருந்த சாதிய மனோபாவமே 17 உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. கண்ணால் கூடக் காணக்கூடாது என்கிற மிகமோசமான சாதிய வன்மமும், அரசதிகாரமற்ற எளிய மக்களான அருந்ததிய சமூகத்து மக்களை சகமனிதர்களாய் மதிக்கத் தெரியாத அரசின் அணுகுமுறையும் தான் இப்பெரும் படுகொலைக்குக் காரணம். நாமும் நடுநிலையாளர்களாய் அந்த கூட்டுமனோபாவத்தை ஏதிர்த்து கேள்வியெழுப்ப திரணியற்றவர்களாகவே இருக்கிறோம்.


சுவரிடிந்து விழுந்ததும் களத்தில் இறங்கி போராடிய சனநாயக சக்திகளை தடியடி நடத்தி ஒடுக்கியதும் குறிப்பாக வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை வழக்குப் பதிந்து கைது செய்வதற்கு முன்பே களமிறங்கி போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் உட்பட 26 பேர் கைது செய்ததையும் கண்ட பிறகும் நம் எவ்வாறு இதை வெறும் விபத்தான பிரகடனம் செய்ய முடியும். அதுமட்டுமல்லாது  இரவோடு இரவாக இறந்த 17 பேரின் உடல்களையும் உறவினர்களுக்கு தகனம் செய்யக் கூடாது வழங்காது அரசே எரித்ததை கண்கூடாகப் பார்த்தப்பின் நம் எவ்வாறு இந்நிகழ்வை வெறும் விபத்து , தீண்டாமைச்சுவரல்ல என்று கூற இயலும். இது நாம் வாழும் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் சாதிய இனவாதப்படுகொலை! அரசதிகாரம் இதற்கு முழுக்க முழுக்க உடந்தையாய் நின்றிருக்கிறது. 



இன்றைய தினம் இச்சம்பவம் நிகழ்ந்து ஒருவருடம் முடிவடைகிறது ஆனால் அதே இடத்தில் மீண்டும் தீண்டாமைச்சுவர் எழுப்பபட்டிருக்கிறது. முன்னைவிட உயரம் கொண்டதாய் இச்சுவர் எழுப்பபட்டிருக்கிறது. அரசும் அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது நாம் சனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்கிற அச்சம் எழுகிறது. மீண்டும் அந்த சுவர் அப்பகுதி மக்கள் மீதே விழாது என்று அரசினால் உறுதியளிக்க முடியுமா என்ன?


இன்றோடு நடூரில் சுவரிடிந்து ஓராண்டு நிறைவடைகிறது அங்கே இறந்தவர்களின் நினைவை ஏந்தி மீண்டும் இப்படியொரு நிகழ்வு நடக்கக்கூடாதெனவும்,  தீண்டாமைச் சுவர்களைத் தகர்த்தெறிவோம் என உறுதியேற்போமென சுவரொட்டி ஒட்டிய சாதி ஓழிப்பு விடுதலை முன்னணி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் தோழர்கள் கைது செய்யப்பட்டு பின் சனநாயக சக்திகளின் நீதிப்போராட்டத்திற்கு பின்னால் விடுதலையாகியிருக்கிறார்கள். நமக்கு இங்கே  அநீதி இழைக்கப்பட்டு இறந்தவர்களை நினைத்துப்பார்க்கவும் உரிமையில்லாமலும் நிற்கிறோம்!


 இடிந்து வீழ்ந்த தீண்டாமைச்சுவர் மறுபடியும் அதே இடத்தில் நடூரில் கட்டப்பட்டிருக்கிறது என்றால் இறந்த 17 உயிர்களுக்கு அரசு தரும் நீதி என்ன?

Leave Comments

Comments (0)