ஆஸ்கார் வைல்ட் : கெரத் ஜென்க்கின்ஸ்

/files/oscar-wildejpg 2020-09-24 17:49:00.jpg

ஆஸ்கார் வைல்ட் : கெரத் ஜென்க்கின்ஸ்

  • 240
  • 0

-தமிழில்: யமுனா ராஜேந்திரன்

ஆஸ்கார் வைல்ட் அயர்லாந்தை சேர்ந்த நாவலாசிரியர். நாடக எழுத்தாளர். 1854 ஆம் ஆண்டு பிறந்த அவர் எழுதிய ஒரே ஒரு நாவல் ‘டோறியன் கிரேயன் சுயசரிதம்’. அவர் எழுதிய இரண்டு புகழ்பெற்ற நாடகங்கள் ‘முக்கியம் இல்லாத பெண்’ மற்றும் ‘நேர்மையாக இருத்தலின் அவசியம்(1895). விக்டோரியன் அறவியல் மதிப்பீடுகளின் மீதான இவரது தாக்குதல்கள் இவரை மிகுந்த சர்ச்சைக்குரியவர் ஆக்கின.

1882 ஆம் ஆண்டில் இவர் மேற்க்கொண்ட அமெரிக்கப் பயண உரைகள் இலக்கிய வட்டாரங்களில் அதனது விக்டோரியன் எதிர்ப்பு அரசியலுக்காக பிரசித்தமானது. 1895ஆம் ஆண்டு சமபாலுறவாளர் என்று குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதற்காக பிரிட்டன் நீதியமைப்பு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

வைல்ட் 1900ஆம் ஆண்டு மிகுந்த தனிமை உணர்விலும் அதுதந்த வேதனையிடையிலும் மரணமுற்றார். 1997ஆம் ஆண்டு அவர் பற்றிய முளுநீளத் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

வைல்ட் எனும் பெயரிலேயே அப்படம் வெளியாகி இருக்கிறது. ஆஸ்கார் வைல்ட் ஒரு காலத்தில் அவர் எழுத்துப்பாணிக்காகவும் நையாண்டிக்காகவும் போற்றப்பட்டார். கலை கலைக்காக என்ற விவாதத்துக்கு துணையாக அவர் பெயர் அதிகம் பாவிக்கப்பட்டது. அவர் ஒரு சமபாலுறவு வீரப்பிரதிமையாகவே சித்தரிக்கப்படுகிறார்.

இந்த ஆரவாரங்களில் அவரது சோசலிஷ அரசியலும், கலைகலைக்காக என்ற அவரது கோஷம், அதிகாரவர்க்க வாழ்வுக்கு எதிரான தனிநபர் சுதந்திரமூம் தேசிய உள்ளடக்கமும் மறைக்கப்படுகிறது. அதிகாரவர்க்க விக்டோரியன் மதிப்பீடுகளுக்கு எதிராக அவர் சரணடைந்த கலை, புதிய சமூகத்தை விளைந்த கலை. அதிகாரவர்க்க விக்டோரியன் வாழ்க்கைக்கு எதிரான கலக்கத்தில் விளைந்த கலை. அவ்வகையில் ஆஸ்கார் வைல்ட் அதிகார வர்க்கக் கலைக்கு எதிரான கலைஞன்.

ஆஸ்கார் வைல்ட் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஆண் விபச்சாரத்துக்கு ஒரு மேட்டுக்குடியனைத் துண்டுகிறார் என்பதாகும். லார்டு அல்பிரட் டக்ளஸ் என்கிற அவரது காதலர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் தப்புகிறார். டப்ளினில் பிறந்த அயர்லாந்துக்காரரான வைல்ட் தண்டிக்கப்பட்டார். அதாவது மேட்டுக்குடியைச் சார்ந்தவரை வைல்ட் வக்கிரப்படுத்துகிறார்.

கீழ்குடியிலிருந்து வந்த ஆஸ்கார் வைல்ட் தண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் இரண்டு: ஒன்று அவர் கீழ்த்தட்டு வர்க்கதினின் றுவந்தவர். மற்றது அவர் அயர்லாந்துக்காரர். இவரது கல்லூரி வகுப்பாள ரான எட்வர்ட் காஸன் ஆங்கில ஏகாதிபத்திய காப்பாளர். உல்ஸ்டர் பகுதிக்காரர். அயர்லாந்து குடிமைச்சட்டத்துக்கு எதிராக முதலாம் உலகப் போர்க்காலத்தில் எதிர்ப்புரட்சி இராணுவத்தை கட்டியமைத்தவர்.

இந்த வழக்கு என்பது ஒழுக்கம், அறம் சம்பந்தமானது மட்டுமல்ல, வர்க்கம் மற்றும் தேசியம் சம்பந்தமானதாக ஆகியது.

1880 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விவசாயத்தில் வீழ்ந்தது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டி எழுந்தது. தாராளவாத கருத்தியலும், சுதந்திரவர்த்தகமும் மாபெரும் நெருக்கடியைச் சந்தித்தன. மாறுபட்ட சமூக நம்பிக்கைக்கான தேடுதல்களும் வர்க்க முரண்பாடுகளும் மோதின. அயர்லாந்து தேசியவாதம் புதிய வீறுடன் எழுந்தது. இக்கால கட்டத்தில்தான் அயர்லாந்திலிருந்து வைல்ட் இலண்டனுக்கு வருகிறார். ஆக்ஸ்போடில் படித்தார்.

வைல்டின் சமகாலத்தில் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் மூவர். ஜான்ரஸ்கின், வில்லியம் மொறிஸ் மற்றும் வைல்ட். மூவருமே விக்டோரியன் மதிப்பீடுகளுக்கும் எதிராக சந்தை வர்த்தக சமூகத்திற்கு எதிராக மாற்ற விளைந்தவர்கள். ரஸ்கின் நிலபபிரபுத்துவ மதிப்பீடுகளுக்கு பின் திரும்பிப்போக விரும்புகிறார். வில்லியம் மொறிஸ் மார்க்ஸிஸ்ட் இயக்கங்களை கட்டியெழுப்புவதில் பங்குபற்றுகிறார். வைல்ட் கலைக்குள் பயணம் போகிறார். சோசலிசம் பற்றிய நம்பிக்கைகள் அவர் எதிர்கொண்ட வழக்கு போன்றன அவரை இயக்கம் நோக்கித் திருப்பாமல் கலைக்குள் சென்று அடைக்கலமாக வைத்தது.

1880 இல் வைல்ட்டின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியானபோது அவர் உடுத்தியிருந்த ஆடைகள் கலகத்தன்மை கொண்டவை. பூ வேலைப்பாடு செய்து அழகுபடுத்திய ஆடைகள். ‘ஒருவர் கலையாக வாழ வேண்டும் அல்லது கலைப்பொருட்களை சூடிக்கொண்டவராகவேனும் இருக்கவேணும். ஒருவர் தன்னை நேசிக்கவேண்டும். அதுதான் காலம் முழுக்கவும் நிற்கும் சந்தோஷம்’ என்றார் வைல்ட். இந்தப்பாணி மரபுரீதியிலான நம்பிக்கைக்கு எதிரான கலகம்.

கலையின் மீதான அதீத அக்கறை என்பது வைல்டை சமூகப் பிரச்சனைகளில் இருந்து வெகுதூரம் கொண்டு சேர்த்தது. வைல்ட் நவனீத்துவத்தை நம்பியவன். விக்டோரியன் சமூகம் ஒழுங்கங்களையும் அறங்களையும் மற்றவர்களுக்கு போதித்துக் கொண்டிருந்தது. ஒருபோதும் அவர்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லை.

குடும்பம், பாலுறவு, ஒழுக்கம், பிறருக்கு தர்மம் செய்வது, அடங்கி நடத்தல் போன்ற மதிப்பீடுகளை திரும்பத் திரும்ப உபதேசம் செய்தார்கள். காலனிய அதிகார ஆதிக்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். சுரண்டலைத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

வைல்ட்டின் நாவல், நாடகங்கள், கோட்பாட்டு எழுத்துக்கள் என எல்லாவற்றிலும் விரவி நின்ற அம்சம் ஒன்றுண்டு. அவரது மையப் பாத்திரங்கள் வேலை செய்வதில் விருப்பம் காட்டுவதில்லை, மாறாக கலை அனுபவம் தரும் சந்தோஷத்தில் மூழ்கித்திளைப்பவர்களாக இருந்தார்கள். இந்த விட்டுவிலகிய சுதந்திரம் தரும் நெருப்பின் வெம்மை விக்டோரியன் சமூகத்தை எரித்தது. ஆட்டிப்படைத்தது.

‘முக்கியமில்லாத பெண்’ நாடகத்தில் சதா வேட்டையாடிக் கொண்டு திரியும் கனவான்களின் வேசத்தை தொலுரிக்கிறார். அடிமைத்தனத்தைப் போக்குவதற்காகத்தான் அடிமைகளைச் சந்தோஷப்படுத்துகிறோம் என போலி வேஷம் போடும் கனவான்களை நையாண்டி செய்கிறார் வைல்ட்.

‘நேர்மையாக இருத்தலின் அவசியம்’ நாடகத்தில் வரும் பிராக்லைஸ் சீமாட்டி இவ்வாறு சொல்கிறார் : ‘மக்களுக்கு கல்வி கொடுப்பதினால் ஏதும் பிரயோசனமில்லை. அப்படிக்கொடுத்தாலும் நம்மைப்போன்ற மேட்டுக்குடிகளுக்கு அது ஆபத்து மட்டுமல்ல நகரச் சதுக்கங்களில் வன்முறைக்கும் அது இட்டுச் செல்லும்!’ அவரது நாடகங்கள் அரச வம்சத்தவரின் போலித்தனங்களை நையாண்டி செய்வதோடு பெண்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிவிக்கிறது.

வைல்டின் படைப்புக்களில் இடம்பெறும் சோம்பியிருத்தல் எனும் கருத்துநிலை ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலுக்கு எதிராகவே எழுகிறது. வைல்டன் கலை மீதான கலகம் என்பது சமூகத்துக்கு எதிரான படித்த வர்க்கத்தின் கலகமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அமெரிக்கப் பயணத்திலான இவரது உரைகளில், தொழிலாளி மக்களின் உன்னதம் குறித்துக் குறிப்பிடுகிறார். ஒரு சுரங்கத்தின் அடியில் நடைபெற்ற சாராய விருந்துக்கு பின்னால் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். ‘இந்த சுரங்கத் தொழிலாளர்களின் மகிழ்ச்சியென்பது பட்டினியோடும் கலை அனுபவத்தோடும் கையோடு கைகோர்த்து செல்கின்றது. இவற்றுக்கு வரையறை என்பதே இல்லை’.

அங்கு அவர் பார்த்த ஒரு சின்ன வாசகம் பியானோவின் மீது எழுதப்பட்டிருக்கிறது. ‘பியானோ வாசிப்பவனை தயவுசெய்து கொல்லவேண்டாம். அவனால் முடிந்த சிறப்புகளை அவன் செய்கின்றான்’. வைல்ட் தொடர்ந்து எழுதுகின்றார். 'கலை என்பது மரண தண்டனைக்கு உரியது எனும் உண்மை நிகழ்வு எனக்கு கடைசியில் என் மனசுக்குள் தைத்தது. உள்ளொடுங்கிய இந்த நகரத்தில் துப்பாக்கியின் அழகியல் நோக்கம் என்பது இசைக்கு மாதிரியாக எவ்வாறு ஆகிறது என்பது என் விசயத்தில் மாபெரும் செய்தி ஆகிறது'.

அடக்குமுறைக்கு ஆளானவரும், அதிகாரத்துக்கு எதிராக கலையைப் பாவித்தவரும் வேறு வார்த்தைகளில் இதைப்பற்றி வேறுவிதமாக விபரித்திருக்க முடியாது.

இவரது முதல் நாடகம் ரஷ்ய பயங்கரவாதிகளைப் பரிவுடன் நோக்கும் படைப்பாகும். அயர்லாந்து சுதந்திரத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார் : ‘இரத்தக்கறை படிந்த கைகளை ஒருபோதும் நான் குலுக்க மாட்டேன்’ என்று சொல்கிற அவரே தொடர்ந்து சொல்கிறார்: ‘இங்கிலாந்து எத்தனை கொடுமை செய்தது என்பதை நான் மறக்க முடியாது. ‘ஒரு நூற்றாண்டுக் கொடுமையின் விளைவுதான் பயங்கரவாதம்‘ என்கிறார்.

அவரது படைப்புக்களில் ‘டோரியன் கிரேயின் சுயசரிதம்(1890) ‘நாவல் அவரது அழகியல் பிரகடனம், அழகியல் சாசனம் என்று சொல்லப்படுகிறது.

அதனது நாயகன் டோரியன் தன்னைக் காலம் கடந்த கலைப்பொருளாக ஆக்கிக் கொள்கிறான். அவனது சுயஓவியம் உத்தரத்தில் நீண்ட நாட்களாக மறைந்து கிடக்கிறது. அவன் தன்னை ஒரு பைசாசமாக ஆக்கிக்கொள்கின்றான். கடைசியில் தன்னையே கொன்று சந்தோசிக்கிறான். தனது சுய ஓவியத்தை கத்தியால் கிழிக்கிறான். ஒரு சமூகத்தில் ஒரு தனிமனிதனின் வரையறைகளை, அவனது செயலின் எல்லைகளை நமக்கு அறிதியிடும் பாத்திரம் டோரியன்.

‘சோசலிசத்தின் கீழ் மனிதனின் ஆன்மா’ எனும் கட்டுரையில் தனிச் சொத்துடமை தகர்ந்த. எதேச்சதிகாரம் அற்ற சோசலிச சமூகத்தை வைல்ட் விழைகிறார். பெர்னாட்ஸா போலவோ பேபியன் சோசலிஸ்டுகள் போலவோ சகலத்தையும் மாறிய அரசாங்கம் கொண்டு தரும் என்று வைல்ட் நம்பவில்லை.

உதவி செய்வது சலுகைக் காசு தருவது, பிச்சைபோடுவது போன்ற விக்டோரியன் தர்ம மரபுகளை அவர் வெறுத்தார். ‘தாங்கள் போகத்தில் வாழ்ந்து கொண்டு பரிதாபத்தில் போடும் சில பருக்கைகளுக்காக ஏன் சனங்கள் அடிமைகளாக மடியவேண்டும்? அவர்கள் கலகம் செய்யவேண்டும்’ என்றார் வைல்ட். அவ்வாறு இடையூறு செய்யும், குழப்பம் செய்யும் மக்களை அவர் வரவேற்றார். ‘அது கட்டாயம் தேவை’ என்றார்.

பிரெஞ்சுப் புரட்சி வன்முறைகள் பற்றி வைல்ட் இவ்வாறு குறிப்பிடுகிறார் : 'மரியா அன்டானியட்டோ ஒரு அரசியாக இருந்ததற்காக கொல்லப்படவில்லை. நிலப்பிரபுத்துவத்தின் மூடுண்ட திட்டத்தில்தான் பசித்த வென்ட்டி விவசாயிகள் தாமாகவே தம் உயிரை அர்ப்பணித்துப் போராடினார்கள். அதன் விளைவே நடந்த சம்பவம்'.

'தனிச் சொத்துரிமை தவறான தனிநபர் சுதந்திரத்தை, தனிநபர் ஆளுமையைத் தருகிறது. தனிச்சொத்துரிமை தகர்ந்த சமூகமே உண்மையான தனிமனித ஆளுமையைத் தரும். எந்த விசயத்தையும் நிபந்தனையற்று நாம் பெருமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. பெரும்பாலான உடல் உழைப்புக்கள் கேவலமாகத்தான் இருக்கின்றன. படைப்பாற்றல் உணர்வும் சந்தோஷமும் இல்லாது செய்யும் எல்லா உடல் உழைப்புக்களும் கேவலம் தான். தான் சந்தோஷப்படாமல் செய்கிற எந்த உழைப்புமே மனிதனை உடலளவிலும் சரி மனதளவிலும் சரி அவனுக்கு காயம் ஏற்படுத்துபவைதான். சேதம் ஏற்படுத்துபவைதான். குப்பைகள் கூழங்களை சேகரிக்கும் பணி மனிதனுக்குரியதல்ல இயந்திரங்களுக்குரியது. இயந்திரம் அனைவரது சொத்தாகும் போது மனிதனுக்குப் பணிபுரியும். இன்று இயந்திரம் மனிதனோடு போட்டி போடுகிறது. சரியான சூழ்நிலையில் இயந்திரம் மனிதனுக்குச் சேவகம் செய்யும்' என்று சுதந்திர சமூகம் பற்றி கனவு காண்கிறார் வைல்ட். அவன் புனிதன்.

வைல்ட் தான்வெறுத்த விஷயங்களுக்கு எதிராக அதனுள் இருந்தே சண்டையிட்டார். அந்த வர்க்கத்துக்குள் இருந்தே விமர்சித்தார். தனது வழக்கு நடைமுறையை வழக்கு மன்றத்துக்கு எதிராக நையாண்டியாக்க நினைத்தார். அதன் போராட்டத்தில் வைல்ட் தோல்வியுற்றார். மௌனமாக்கப்பட்டார். தனிமையில் மரணமுற்றார்.

ஆஸ்கார் வைல்ட் இப்போது பிரச்சாரம் செய்கிறபடி சமப்பாலுறவாளன் மட்டுமல்ல அதிகார சமூகத்துக்கு எதிரான கலகக்காரன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசியவன். சோசலிசம் விரும்பியவன். அனைத்துக்கும் மேலாக தனது கலையாளுமையை அதற்காக அர்ப்ணித்தவன்.

‘கற்பனைகள் கனவுகள் தவிர்ந்த ஒரு உலகப்படம் பார்ப்பதற்குக்கூட தகுதியற்றது. மனிதம் வாழ்கின்ற ஒரு நாட்டிலிருந்துகொண்டு கூடுதல் மானுடக்கனவுகள் நிறைந்த மறுநாட்டைக் கனவுகாண வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும். முன்னேற்றம் என்பது கனவுகளின் நிறைவேற்றம்தான்’ என்றெல்லாம் கனவுகண்ட வைல்ட் விக்டோரியன் சமூகத்தால் கழுவில் ஏற்றப்பட்டான்.

Leave Comments

Comments (0)