மலைக்கு மேல் சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் கார்கில் கிராம மாணவர்கள்

/files/sdsg-2020-11-09-13:26:37.jpg

மலைக்கு மேல் சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் கார்கில் கிராம மாணவர்கள்

  • 13
  • 0


ர்ரூஃப் ஃபிடா

தமிழில்: கோபி


சூரியன் மேலேறிவிட்டது. ஆனால் லட்டூ கிராமத்தின் அதிகாலை குளிர்ச்சியை சயீத் இம்தியாஸ் முகத்திலிருந்து வெளிவரும் பனிப்புகை மூலம் பார்க்க முடிகிறது. தன்னுடன் படிக்கும் ருக்ஷனா வருவதைப் பார்த்ததும், மனமில்லாமல் தன்னுடைய ஷூ கயிறைக் கட்டுகிறான் 12-ம் வகுப்பு பொருளியல் மாணவனான இம்தியாஸ். அவன் இன்று என்ன படிக்கப் போகிறான் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறாள் ருக்ஷனா. அப்போதுதான் மாலையில் இம்தியாஸ் திரும்பி வந்ததும், அவள் கற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் இம்தியாஸ் வருத்தத்தில் உள்ளான். ஏனென்றால், தன்னுடைய ஆன்லைன் வகுப்பிற்காக இணைய தொடர்பு தேடி, அவன் இன்னும் இரண்டு கிமீ பயணம் செய்து, ஆபத்தான மலைப் பாதையில் ஏற வேண்டும். இது தினமும் நடக்கிற விஷயம். கார்கில் மாவட்டத்தில் உள்ள லட்டூ கிராம மாணவர்கள் தினமும் இரண்டு கிமீ பயணம் செய்து, உதலோ மலையேறி இணைய வசதியை பெறுகிறார்கள். மாலையில் அன்றைய பாடத்தோடு வரும் மாணவர்களுக்காக மாணவிகள் காத்திருக்கிறார்கள்.

ஷிங்கோ நதிக்கரையோரம் இருக்கும் லட்டூ கிராமம், 1965-ம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் போருக்குப் பிறகே உருவானது. அதற்கு முன் இருந்த டெரிலாங் கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டு, இரு நாட்டுப் படைகளும் தாங்கள் கைப்பற்றிய பகுதியில் படைகளை நிறுத்தின. பாகிஸ்தான் ஆக்ரமித்த பகுதி குல்தாரி ஸ்கர்டு என்றும் இந்தியா கைப்பற்றிய பகுதி லட்டூ என்று பிரிக்கப்பட்டது.

மாவட்ட தலைமையகத்திலிருந்து 19கிமீ தூரத்தில்தான் இக்கிராமம் இருந்தாலும், இணைய வசதி சுத்தமாக இல்லை. மொபைல் தொடர்பும் மிக மோசமாக உள்ளது. நீங்கள் புகைப்பட கலைஞராக இல்லாதபட்சத்தில், இந்தக் கிராமத்தில் மொபைல் போனோடு நுழைந்து எந்தப் பயனும் இல்லை. 2016 வரை வாகனம் செல்வதற்கான நல்ல சாலை வசதி கூட இங்கு கிடையாது. இன்று வரை அடிப்படை வசதிகளே இல்லாதபோது, இணையத்தொடர்பை யாரும் முக்கியமாக நினைக்கவில்லை. இந்தளவிற்கு இணையம் தேவைப்படும் என கிராமப் பெரியவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

“சரியான சாலை வசதி இல்லாமலும், தண்ணீர் பிரச்சனையை சந்தித்துக் கொண்டும், பொருளாதார வசதி இல்லாமலும், எப்போது போர் மூளும் என தினமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், இணைய வசதி பற்றி நீங்கள் நினைத்துக் கூட பார்க்க மாட்டீர்கள். ஏற்கனவே எங்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளது. எங்களின் குறைகள் பட்டியலில் இணைய வசதி ஒருபோதும் இருந்ததில்லை” எனக் கூறுகிறார் கிராம தலைவர்களில் ஒருவரான அஸ்கர் அலி.

ஆனால் இந்த வருடம், வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த ஆரம்பித்தன. இதனால் இணைய வசதி அத்தியாவசிய தேவையானது. கிராமத்தின் அருகே எங்கெல்லாம் இனைய தொடர்பு கிடைக்கிறது என கிராமத்து மாணவர்கள் தேடத் தொடங்கினர்.

“இணையத் தொடர்பை தேடி கண்களில் கவலையோடும் கையில் மொபைல் போனோடும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வருகிறார்கள் மாணவர்கள். பார்ப்பதற்கு மாணவர்கள் அணிவகுப்பு போல் தோன்றும். அவர்கள் இந்தளவிற்கு கவலைப்படுவதைப் பார்க்கும்போது பெரியவர்களான எங்களுக்கு திகைப்பாக உள்ளது” என நினைவுகூர்கிறார் அஸ்கர்.

கிராமத்திலிருந்து இரண்டு கிமீ தொலைவிலுள்ள உதலோ மலை மீது இணையம் கிடைப்பதை கண்டுபிடித்தனர் மாணவர்கள். உதலோவில் இணைய வசதி கிடைப்பது லட்டூ மாணவர்களுக்கு “செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்” கண்டுபிடிப்பது போன்றது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் காலையிலும், தங்கள் பை, சாப்பாடு கூடை மொபைல் போன் மற்றும் நம்பிக்கையோடு மலை மீது ஏறுகிறார்கள்.

ஆனால் உதலோ மலை மேல் இந்திய ராணுவத்தின படைப்பிரிவு காவல் காத்து வருகிறது. இதனால் மலைக்கு தங்கள் பெண் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர்.

“அங்கு ராணுவம் இருப்பதால் உதலோவிற்குச் செல்ல எங்கள் பெற்றோர்கள் விடுவதில்லை. பெரும்பாலும் அது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி. எங்கள் பெற்றோர்களின் பயத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். மேலும், உதலோவிற்குச் செல்லும் பாதை எளிதானதில்லை. கொஞ்சம் கவனம் திசை திரும்பினாலும் உயிருக்கு ஆபத்தாக முடியும்” என பயத்துடன் கூறுகிறார் 9-ம் வகுப்பு படிக்கும் நஸியா.

மார்ச் மாதத்தில், ஊரில் உள்ள மாணவரக்ள் சேர்ந்து கிராமத்து நுழைவாயிலில் தண்ணீர் தொட்டி, சோப் மற்றும் கிருமி நாசினியை வைத்தனர். அப்போதுதான் கிராமத்திற்கு நுழையும் எவரொருவரும் கை கழுவி விட்டு வர முடியும். தற்போது தங்களோடு படிக்கும் மாணவிகளுக்கும் பாடம் கற்றுக் கொடுக்கும் கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆண்லைன் வகுப்பிற்காக உதலோ மலைக்குச் செல்கிறார்கள் சிறுவர்கள். மாலையில் திரும்பி வந்ததும், அன்றைய வகுப்பில் படித்ததை சிறுமிகளுக்கு கற்றுக் கொடுப்பதோடு ஆசிரியர் கொடுத்த பாடங்களை அவர்களுக்கும் கொடுக்கின்றனர்.

“மிகவும் பதட்டமாக இருக்கும். முதலில், இரண்டு கிமீ பயணம் செய்ய வேண்டும், அதன்பிறகு மலையேற வேண்டும். பின்பு படித்த பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். எங்கள் கிராமம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இதையெல்லாம் நாங்கள் செய்கிறோம். இல்லையேல் எங்கள் கிராம மாணவிகளால் மற்ற மாணவிகளோடு போட்டி போட முடியாது” என்கிறார் இம்தியாஸ்.

உதலோ மலைமேல் ஏறி சரியான நேரத்திற்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது மாணவர்களுக்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கிறது. வகுப்பு நேர மாற்றத்தால், பல ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் தவற விட்டுவிடுகின்றனர்.

கிராமத்தில் இணைய வசதி இல்லாததால், எப்போது வகுப்பு ஆரம்பிக்கும், வகுப்பு நேர மாற்றம் போன்ற அறிவிப்புகள் எனக்கு கிடைப்பதில்லை என்கிறார் முதுகலை பட்டதாரி மாணவரான சயீத் இஃப்திகார்.

“சில சமயங்களில் வகுப்பு நேர மாற்றம் குறித்தோ அல்லது சில பாட ஒப்படைப்புகள் குறித்தோ வாட்ஸப் குழுவில் ஆசிரியர்கள் தெரிவிப்பார்கள். எந்த நேரமும் எங்களால் மலை மேல் இருக்க முடியாத காரணத்தாலும், கிராமத்திலும் இணைய வசதி இல்லாததாலும் பல நேரங்களில் பாடங்களை தவற விட்டுவிடுவோம் அல்லது நேரத்திற்கு ஒப்படைப்பு பணிகளை அனுப்ப முடியாமல் போகும்” என்கிறார் இஃப்திகார்.

மேலும், உதலோ மலை மேல் ராணுவம் இருப்பதால், அதிகாலையிலும் இரவு நேரத்திலும் மாணவர்கள் அங்குச் செல்ல முடியாது. அதனால் காலை மற்றும் மாலை வகுப்புகளை மாணவர்கள் தவற விட்டு விடுகின்றனர்.

இஃப்திகார் கூறுகையில், “உதலோவின் மேலே சென்றாலும் இணையத்தின் வேகம் மிக மோசமாகவே உள்ளது. ஆசிரியர் நடத்துவதை தெளிவாக புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் சிரமப்படுவோம். இணைய வேகம் குறைவாக இருப்பதால், ஒரே சமயத்தில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவும் பாடங்களை பதிவிறக்கம் செய்யவும் முடியாது. இதற்காகவே பாடங்களை பதிவிறக்க செய்ய இன்னொரு போனை வைத்திருப்போம்.”

இந்தக் கிராமத்தில் ஒரே ஒரு அரசாங்க நடுநிலைப் பள்ளி மட்டுமே உள்ளது. தனியார் பள்ளிகள் எதுவும் இல்லை. லட்டூ கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹூசைன், தனது கிராமத்திலிருந்து 20கிமீ தொலைவிலுள்ள மற்றொரு கிராமத்தில் இருக்கும் அரசாங்க நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரும் அவ்வப்போது இணைய வசதி பெறுவதற்காக உதலோ செல்வார்.

“மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் தங்களை புதுப்பித்துக் கொள்ள இணைய வசதி தேவையாக உள்ளது. புதிய விஷயங்கள் மற்றும் கற்றலில் புதிய நுட்பங்களை அறிந்துகொள்ளவும் நானும் உதலோ செல்வேன். அப்போதுதான் என்னுடைய கற்றுக்கொடுக்கும் முறை பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார் ஹூஸைன்.

ஆசிரியர்கள் தங்கள் சொந்தக் கிராமத்தில் இருந்து கொண்டே ஆன்லைன் வகுப்பு அல்லது சமுதாய வகுப்புகளை எடுக்குமாறு சிவில் நிர்வாகம் மார்ச் மாதம் கேட்டுக் கொண்டது. கிராமத்தில் இணைய வசதி இல்லாததால், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது இயலாத காரியம். ஆகவே, சில படித்த கிராமத்தினரோடு சேர்ந்து சமுதாய வகுப்புகளை தொடங்கினார் ஹூஸைன்.

ஆனால் ஹுஸைன் நடுநிலைப் பள்ளி ஆசிரியர். அவரால் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கற்றுக்கொடுக்க முடியும். முதுகலை பட்டதாரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக எந்நேரமும் உதலோவில் இருக்கிறார்கள். மீதமுள்ள படித்த கிராமத்தினரோ உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் தகுதியில்லாமல் இருக்கிறார்கள்.

கோவிட்-19 ஊரடங்கில் மட்டுமில்லை, கிராமத்தில் உள்ள உயர் வகுப்பு மாணவர்களுக்கு எப்போதும் இணைய வசதி தேவையாக உள்ளது. குறிப்பாக -20 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறையும் குளிர்காலங்களில் அதிகம் தேவைப்படுகிறது. குளிர்காலங்களில், கிராமத்தைச் சேர்ந்த உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் ஒன்று கார்கிலில் தங்கியிருக்க வேண்டும் அல்லது குளிர்காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் நெடுஞ்சாலையோடு கிராமத்தை இணைக்கும் மூன்று கிமீ சாலை வாரக்கணக்கில் பனியால் மூடப்பட்டிருக்கும்.

இங்குள்ள ஏழை கிராமத்தினர் கோடை காலத்தில் கடுமையாக உழைத்து, சேமித்த பணத்தைக் குளிர்காலத்தில் தங்கள் குழந்தைகள் கார்கிலில் தங்குவதற்கு பயன்படுத்துகின்றனர். கார்கிலில் தங்குவதற்கு பெரும்பாலான மாணவர்களிடம் வசதி இல்லை. கிராமத்தில் உள்ள 80% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள். இக்கிராமத்திலிருந்து இதுவரை 20 பட்டதாரிகள் மற்றும் நான்கு முதுகலை பட்டதாரிகள் மட்டுமே உருவானதற்கு இதுவும் ஒரு காரணம்.

“மாணவர்களின் உயர் கல்விக்கு உதவுமென்று நினைத்து அரசாங்கத்தின் உதவியின்றி, 2015-ம் ஆண்டு மூன்று கிமீ தூரத்திற்கு தற்காலிகமாக நாங்களே சாலை அமைத்தோம். இந்த சாலையை அமைக்க ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் பணியாற்றினார்கள். ஆனால் இது போதாது. ஏனென்றால் குளிர்காலங்களில் இது பெரும்பாலும் மூடப்பட்டே இருக்கிறது” என்கிறார் உள்ளூர் பெண்மனியான லைலா பனோ.

ஊடகவியலாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சஜத் கார்கிலி கூறுகையில், “காக்ஸர், பட்கம் மற்றும் ஷிம்சா போன்ற சில கிராமங்களிலும் இணைய வசதி இல்லாததால், அங்குள்ள மாணவர்கள் ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு தொலைதொடர்பை கொடுங்கள். அப்போதுதான் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியும். அவரகளின் சிரமங்களும் குறையும் என பல முறை நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்துவிட்டோம்.”

“இணைய வசதி இல்லாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, கிராமம் அமைந்திருக்கும் இடம். இக்கிராமம் பாகிஸ்தானோடு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஆகவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம். ஆகவே அந்த தொலைதொடர்பு அமைப்பதற்கு முன், முதலில் ராணுவத்தின் அனுமதி முக்கியம்” எனக் கூறுகிறார் தேசிய மாநாடு மட்சியின் கார்கில் மாவட்ட தலைவர் முகமது ஹனிஃபா.

புதிய கோபுரங்களை பொறுத்துங்கள் அல்லது சிக்னல் வரம்பை அதிகப்படுத்துங்கள் என தொலைதொடர்பு நிறுவனங்களிடம் பல முறை கூறிவிட்டோம். ஆனால் எங்கள் வேண்டுகோளை அவர்கள் காது கொடுத்து கேட்பதேயில்லை என்கின்றனர் உள்ளூர்வாசிகள். 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில், கதாபாத்திரங்களைப் பயமுறுத்தக் கூடிய “குளிர்காலம் வரப் போகிறது” என்ற பிரபலமான வசனம் ஒன்றுண்டு. குளிர்காலம் தொடங்கப் போகிறது என்பது இப்போதே மாணவர்களின் முதுகுத்தண்டை சில்லிட வைக்கிறது. விரைவில் உதலோ பனியால் மூடப்படும். குளிர்காலத்தில் மலை மேல் ஏறுவது முடியாத காரியம். 

இன்னும் கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால், எப்போது நேரடி வகுப்புகள் தொடங்குமென்ற தெரியாத நிலை உள்ளது. தங்கள் கிராமம் அமைந்திருக்கும் இடத்தால் எந்தளவிற்கு தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை கிராமத்தினர் அறியாமல் இருக்கலாம். ஆனால், கிராமத்தில் இணைய வசதி எந்தளவிற்கு முக்கியமானது என்பதை அவர்கள் நிச்சியம் புரிந்து கொண்டிருப்பார்கள். 

Leave Comments

Comments (0)