மதுரை பாலுவின் நினைவாகவே ஆர்யாவுக்கு பாலு என பெயர் வைத்தேன் !

/files/s-p-jananathan-07679aa3-e447-47b2-ad93-ca4570afe15-resize-750-2021-03-15-20:35:11.jpg

மதுரை பாலுவின் நினைவாகவே ஆர்யாவுக்கு பாலு என பெயர் வைத்தேன் !

  • 4
  • 0

தினேஷ்


கலை, கலைக்காகவா? மக்களுக்காகவா?


கலை கலைக்காகவே, அல்லது கலை மக்களுக்காகவே என்ற இருவேறு நிலைகள் இருக்கிறது. இதில் எல்லோரும் கலையாவும் மக்களுக்காகவே என்ற சிந்தனையில் இருப்பார்களேயாயினும், கலை கலைக்காகவே என்று எடுக்கப்பட்ட படங்களைத்தான் இந்த மக்களும், சினிமாக்காரர்களும் கொண்டாடுகிறார்கள்.


பாடல்களைத் தவிர்த்த படங்கள்தான் சிறந்தது, என்பதும் உண்டு, ஆனால் எளியமக்களுக்கு பாடல்கள் மூலமாகத்தான் ஒரு கருத்தைச் சொல்லமுடியுமெனில், பாடல்களைப் பயன்படுத்தலாம், தவறில்லை. ஒட்டுமொத்த படமாகப் பார்க்கையில், அதில் சொல்ல வந்திருக்கிற பொருள், எது?, எந்தவகையில் அது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? என்பதைக் கவனிப்பதுதான் முறையானது. 


மக்களுடன் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக ஒரு படம் எடுக்கிறோம், அந்தப் படங்களில் கலையம்சங்கள் வரலாம். ஆனால், கலையம்சங்கள் இருக்கிற படங்கள் மட்டுமே சிறந்தது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது.


சிறுபட்ஜெட் படங்கள்தான் சிறந்தவை, என்று ஒரு வழக்கு உள்ளது. முதல் படத்தில் குறைந்த முதலீடு காரணமாக மக்களின் ஏழ்மை நிலையைப் பற்றி ஒரு படம் எடுப்பார்கள், அது வெற்றி பெற்றால், அடுத்த படத்தில் அந்த இயக்குனரின் படங்கள் வேறுவிதமாக இருக்கிறது. ஆக, இந்த இடத்தில் அந்த இயக்குனரின் உறுதியான சிந்தனை என்ன? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.


படங்கள் பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும், அதில் எந்த நடிகர்கள் நடித்திருந்தாலும், அதில் எது பாடுபொருளாக இருக்கிறது? என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நடிகன் தன்னுடைய முயற்சியால் பெரும்பான்மையான மக்களைச் சென்றடைந்திருக்கிறான். 


அவனையும், நான் சொல்லவருகிற விஷயத்திற்குப் பயன்படுத்திக்கொள்வதுதானே சிறந்த கலை. ’புறம்போக்கு’, படத்தில், ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம்  மூவருமே மக்களைச் சென்றடைந்தவர்கள்.


அவர்கள் எப்படி அந்நிலையை அடைந்தார்கள் என்ற ஆராய்சி எனக்குத் தேவையில்லை. மக்களிடம் பரிச்சயமானவர்கள் என்பது உண்மை. அப்பொழுது, அவர்களை என் படத்திற்குப் பயன்படுத்திக்கொள்வதும் சரியான செயல்தானே. இல்லை அறிமுக நடிகர்கள்தான் படத்தில் இருக்க வேண்டும், குறைந்த பட்ஜெட் படம் வேண்டும், அதுதான் சிறந்தபடம் என்று விமர்சகர்கள்கூட தரம்பிரித்துப் பார்க்கிறார்கள். 


ஆர்யா ஒரு படத்திற்குள் வந்துவிட்டாலே அது கமர்ஷியல் என்ற முத்திரை குத்தப்படுகிறது. ஆர்யா, என்ன சமூகப்பிரச்னையை படத்தில் பேசியிருக்கிறார்?, என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. எல்லோருக்கும் ஒரு முன்முடிவு இருப்பதுபோல, விமர்சகர்களுக்கும் முன்முடிவு இருக்கிறது. ஆர்யா பல சாகசங்கள் செய்பவராக ”புறம்போக்கு”, படத்தில் காட்டியிருப்பீர்கள். பின்னர் சிறைச்சாலையில் அவர் ஒவ்வொருமுறை ஷாமிடம் “நான் தப்பிச்சுடுவேன்”, என்று சொல்கிறபொழுது ”ஆர்யா இறுதியில் எப்படியும் தப்பித்துவிடுவார்”, என்று பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். 


ஆனால், க்ளைமேக்ஸில் திடீரென அவருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது போலக் காட்சிப்படுத்த என்ன காரணம்?


 கதையின்படி ஆர்யா தூக்கலிடப்பட்டால்தான் இந்தப் படம் முழுமையடையும். ஆனால், இந்தப் படம் எடுக்கிற காலகட்டத்தில் பேரறிவாளனுக்கு தூக்குத்தண்டனை நிலுவையில் இருந்தது. அப்படியிருக்கும்பொழுது, ஒரு தமிழனாகயிருந்து என்னால் அப்படியொரு க்ளைமேக்ஸ் காட்சியை வைக்கமுடியவில்லை. 


அது ஆயுள்தண்டனையாக மாற்றியதால், படத்தில் ஆர்யாவைத் தூக்கில் போட்டேன். ஒருவேளை, பேரறிவாளனுக்கு தூக்குதண்டனை உறுதியாகியிருந்தால் படத்தில் ஆர்யாவைத் தப்பிக்கவைத்திருப்பேன். பேரறிவாளனின் வழக்குதான் என் படத்தின் இறுதிக்காட்சியைத் தீர்மானித்தது.


அடுத்து, இதுவரையில் எத்தனைபேரைத் தூக்கில் போட்டிருக்கிறார்கள், என்பதற்கான தரவுகளே சரியாகக் கிடைக்கவில்லை. சினிமா எப்படி வந்தது?, முதல் பேசும்படம் எது? மெளனப் படம் எது? என்பதற்கான தகவல்களையெல்லாம் சேகரித்துவைத்திருக்கிற நபர்கள் இருக்கிறார்கள். ஆனால், இதுவரையில் எத்தனைபேர் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்கள், என்பதைக் குறித்துவைத்துக்கொள்ளாத ஒரு நாடு இந்தியா. 


ஏதோ ஒரு பத்திரிக்கையில் 86 என்று எழுதியிருந்ததை வைத்து அடுத்தகட்டமாகப் படமெடுக்கப்போகிறோம்.

பின்னர், நாங்கள் தூக்குக் கொட்டடிக்குச் சென்று பார்த்தால், ஒருமுறை கம்பியை இழுத்தால், ஒரே சமயத்தில் இரண்டு பேர்களை தூக்கில் போடுவது போன்ற முறைகள் இருந்திருக்கிறது. 


தூக்குத்தண்டனையை நிறைவேற்ற அவ்வளவு தேவையிருந்திருக்கிறது. நிறையபேரைத் தூக்கிலிடும் வேலை இருப்பதால், ஒருமுறை லிவரை இழுத்தாலே இரண்டு பேர் வரை தூக்கிலிடும் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எனில், எத்தனைபேரை இதுவரை தூக்கிலிட்டிருப்பார்கள்?. அதற்கான வரலாறே இல்லை. படத்தின் முடிவில் ஆர்யாவைத் தூக்கிலிட முடிவுசெய்திருக்கிறேன். 


ஆர்யாவைத் தூக்கிலிடவேண்டுமென்றால், அவர்மேல் ஒரு வழக்கு பதிவாக வேண்டும். சட்டத்தில் மொத்தம் ஏழு பிரிவுகளின்கீழ் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. (Indian Penal Code).  அதில் ஐந்து குற்றங்களை ஆர்யா செய்கிறார். 


அதன்மூலம் அவருக்கு மூன்று தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. படத்தில் இந்த ஐந்து குற்றங்களையும் செய்யவைத்தால்தான் ஆர்யாவிற்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற முடியும். கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்யா உண்ணாவிரதம் இருந்தார், அவரைக்கொண்டுபோய் தூக்கிலிட்டார்கள், என்று காண்பிக்கமுடியாது.


 

ஆர்யா ஏற்று நடித்திருக்கிற பாலு கதாபாத்திரம் செய்கிற குற்றங்கள்தான், மற்றவர்களுக்கு சாகசமாகத் தெரிகிறது. நான் அந்தச் சாகசத்தை என்  படத்திற்குப் பயன்படுத்துகிறேன். கொள்ளையடிப்பது, கொள்ளையடிக்கும்பொழுது கொலை செய்வதற்கு தூக்குத் தண்டனை., ஆயுதங்களை மறைத்துவைத்திருப்பது, மறைத்துவைத்திருக்கிற ஆயுதங்களை வைத்துப் பயிற்சிகொடுப்பதற்கு தூக்குத்தண்டனை இருக்கிறது.


ராணுவத்தை நேரடியாக எதிர்ப்பதற்கு தூக்குத்தண்டனை. பகத்சிங் சிறைபிடிக்கப்பட்டபோது, ”பொதுமக்களில் ஒருவனாக  தூக்கில் போடாதீர்கள், என்னைச் சுட்டுக்கொல்லுங்கள்”, என்கிறார். 


நான்  இராணுவவீரன், இந்த இராணுவம், இன்னொரு இராணுவத்தை எதிர்த்துப் போராடியது. ஒரு இராணுவவீரனைச் சுட்டுக்கொல்லுங்கள் என்று கேட்டார். நான் Civilian இல்லை, Military என்கிறார். 


மதுரை பாலுவின் அடையாளமாகத்தான், ஆர்யாவிற்கு ”பாலு”, என்று பெயரிட்டிருந்தேன். அப்போது சிறையில், ‘பாலு’, முதலானோர் விடுதலையாகிவிடுவார்கள் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், திடீரென்று இரண்டு நாளில் மதுரை பாலுவிற்கு தூக்கு என்ற செய்தி வருகிறது. நல்லக்கண்ணு அய்யா உள்ளிட்டோர் அவரோடுதான் சிறையில் இருந்திருக்கிறார்கள். தூக்குமேடையில் பாலு, ”லால் சலாம்”, என்று கத்துவது நல்லக்கண்ணு அய்யாவின் காதிற்கு எட்டியிருக்கிறது. இவர்களும்  ”லால்சலாம்”, என்று சிறைச்சாலையிலிருந்து மறுகுரல் விட்டிருக்கிறார்கள்.


 இது நிகழ்ந்தது. ஆனால், நல்லக்கண்ணுவே சொல்கிறார், பாலு நிரபராதி என்று. போலீஸ்காரர்கள்தான் பாலுவின் மேல் வேண்டுமென்றே  செய்யாதகுற்றங்களையும் சோடித்துள்ளனர். அவையனைத்தும் பொய் வழக்கு. பொய்வழக்கிற்கே ஒருவரை இழுத்துவந்து தூக்கில் போட்டுள்ளனர். 


அவர் உடம்பை சிறை வளாகத்திற்குள்ளேயே எரித்துள்ளனர். அந்த ஒரு காரணத்தை என் படத்தைப் பயன்படுத்தி வெளியே சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.  நான் ஆர்யாவைத் தூக்கில்போடுவதுபோலத்தான் படத்திலும் காட்டியிருந்தேன். அவன் சிறையிலிருந்து தப்பித்து வெளியில் ஒடிவிட்டான், என்று காண்பித்திருந்தலாவது மற்றவர்கள் கேள்விகேட்கலாம். ஆனால் சென்சாரில் இருப்பவர்கள், ”கடைசியில எமலிங்கம், பாலுவுக்கு சல்யூட் வைக்கிறாரே, அப்படிப்பார்த்தால் பாலு கதாபாத்திரம் Glorify ஆகுதே”, என்றனர். 


படத்தில் ஆர்யா செய்த குற்றங்கள் ஐந்தும் மக்களுக்காக. அதிலிருந்து, அவன் தூக்கிற்குப்போகிறான். மக்களுக்காக உயிரிழந்தவன், நாயகனாகத்தானே மாறுவான். அப்படிப்பார்த்தால் கதைப்படியே அவன் glorify ஆகவேண்டும். 


பேரறிவாளனின் தூக்குதண்டனை வழக்கு உங்களைப் பாதித்தது? உங்கள் படம் பேரறிவாளனைப் பாதித்ததா?


ஆம் பாதித்திருக்கிறது. படத்தைப் பற்றி வருகிற விமர்சனங்களையெல்லாம் கேள்விப்பட்டு, சிறைச்சாலியிலிருந்து அனுமதிபெற்று என்னுடன் தொலைபேசியில் பேசினார்.  மூன்று பக்கத்திற்கு கடிதமும் எழுதி அனுப்பினார். பின்னர், நானும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். 

அப்பொழுது, ”இப்படம்  கொஞ்சம் முன்கூட்டியே வந்திருந்தால், என் வழக்கு இன்னும் வேகமாக விசாரிக்கப்பட்டிருக்கும். 


எனக்கு மேலும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்”, என்றார். நான் ஒரு படம் எடுத்தேன். அதில் மிகமுக்கியமான சமூகப் பிரச்னையை கையெலெடுத்திருக்கிறேன். அதனோடு சம்பந்தப்பட்டிருக்கிறவரே என்னைச் சந்திக்க விரும்புவதும், அவரைப் போய் நான் பார்த்ததும், என் படைப்பு நோக்கத்தின் பலம் என்று நினைக்கிறேன். 


’ஈ’, படத்தில் Bio War, ’பேராண்மை’,யில் மலைவாழ் மக்கள், ’புறம்போக்கு’, படத்தில் அயல்நாட்டு தேசங்கள், நம் நாட்டை குப்பைத்தொட்டியாக்கிவைத்திருக்கிற அவலம் குறித்து பேசியிருக்கிறீர்கள். இதுபோன்று, ஒரு களம் கிடைத்தவுடன் அடுத்தடுத்து நீங்கள் மேற்கொள்கிற களப்பணிகள் என்னவாகயிருக்கும்?

’ஈ’, படம் சேரியில் வாழ்கிற ஒரு இளைஞனைப் பற்றிய கதையாகயிருக்கும். நோய்க்கான மருந்து கண்டுபிடிக்க பல கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்த மருந்தை முதலில் எலிக்குக் கொடுத்து அதனைச் சோதிப்பார்கள். எலிக்குப் பிறகு குரங்கு. குரங்கிற்கு அடுத்து?


மனிதர்கள். 

அதுவும் பணக்காரர்களுக்கு அந்த மருந்து போவதற்கு முன்னால், ஏழைகளிடம் அதனைச் செலுத்திப்பார்க்கிறார்கள்.   பாராளுமன்றத்திலேயே  மனிதர்களை எலிகள் போல சோதித்துப்பார்க்கிற ஆராய்ச்சிகள் நடப்பதை ஒத்துக்கொள்கிறார்கள். 


பின்பு, ”புறம்போக்கு”, படத்தில் சொல்லப்பட்டதுபோல, அயல்நாடுகள் தாங்கள் உபயோகித்த ஆயுதங்கள் முதற்கொண்டு நம் நாட்டில் வந்து கொட்டுகிறார்கள். அதுகுறித்தும் தகவல்களைத் தேடுகிறேன். 

ஏனென்றால், திரையில் சொல்லக்கூடிய தகவல்கள் பொய்யாக இருந்துவிடக்கூடாது. கதையில் வலு உண்டாக இவ்வாராய்ச்சிகள் எல்லாமே அவசியம்.அந்த ஆய்வுகளின் அடிப்படையில்தான் என் படத்தின், திரைக்கதையை அமைக்கிறேன். ’ஈ’, படத்தில் நடப்பது போன்ற Bio - War பற்றி ஒவ்வொரு மருத்துவராகக் கேட்டுக்கொண்டே வந்தேன். அப்போது ஒரு மருத்துவர், ”இனிமேல் நீங்க ஆதாரத்தைத் தேடிப்போகாதீங்க. உங்க கற்பனையில என்னவெல்லாம் தோணுதோ, அதையெல்லாம் எழுதுங்க, அந்த எல்லா விஷயத்துக்கும் ஆதாரம் நான் தர்றேன்”, என்றுசொன்னார். அந்தளவிற்கு மனிதர்கள் மேல் மருத்துவ சோதனைகள்  பல கட்டங்களில் நடந்துவருகிறது.


புறம்போக்கு படத்தில், பாலுவுக்கும் குயிலிக்குமான உறவு, காதலா?, நட்பா?,  என்று எந்தவித தீர்க்கமான முடிவுகளும் கொடுக்காமல், படத்தை முடித்திருப்பது எதனால்?

ஆண், பெண்ணிற்கான உறவு அது காதலாகவும், இருக்கலாம், நட்பாகவும் இருக்கலாம். என் படத்தில் அவ்விருவரும் கலவி செய்வது போலக் காட்டியிருந்தாலும், அவர்களுக்கு நடுவில் காதல் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களுக்கு இடையில் என்ன உறவு என்பது படம் பார்க்கிறவர்களின் மனநிலையில்தான் இருக்கிறது. 

ஒரு இயக்குனர் குறிப்பிட்டது இங்கு ஞாபகம் வருகிறது. “தொடாமலேயே  ஆணும் பெண்ணும் காதலிப்பது போல படம் எடுத்துவிட்டோம். இதைத்தாண்டிய சிறப்பான காதலை யாரால் சொல்லமுடியும்?”, என்றார். அப்படியென்றால் தொடாமலேயே,  இருபாலாருக்கும் நடுவில் இருக்கிற வாழ்க்கையைக் காண்பித்தால் அதுதான் சிறந்த வாழ்க்கையா?.  இது என் கேள்வி. 


கல்யாணம் செய்தபிறகு, இருவரும் ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ளாமலேயே வாழ்ந்திருக்கிறார்கள். அதுதான் சிறந்த வாழ்க்கை என்று அவர் எடுத்துக்கொள்வாரா.? . இங்கு செக்ஸ், காதல் இரண்டுக்குமான புரிதலிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. இதைத்தனியான ஒரு கதையாக எடுத்துக்கொண்டு ஒரு திரைப்படம் இயக்கவேண்டும். என் முதல் படமான ’இயற்கை’,யிலேயே கூட இதை லேசாக உரசியிருப்பேன்.


ஏற்கனவே ஒருத்தனை விரும்பியிருந்த பெண், அடுத்துவந்த ஒருவனையும் மனதிற்குப் பிடித்திருந்தால் விரும்புவாள், என்று சொல்லியிருப்பேன். எல்லோருக்குமே, இரண்டாவது காதலை ஒரு பெண் மேற்கொண்டால், அந்தப் பெண்மேல் குறை சொல்வார்கள். ஆனால், ’இயற்கை’, படத்தில் காதலையே அந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறார்கள். 


அடுத்த நாள் தற்கொலைப் படைத்தாக்குதலுக்கு முன்பு, பாலுவுக்கும், குயிலிக்குமிடையில்  உடலுறவுக்காட்சியை எடுக்கத் திட்டமிட்டிருந்தேன். அடுத்து அதே பெண், எமலிங்கத்தோடு உடலுறவில் ஈடுபடுகிறாள் என்று திரைக்கதை பயணிக்கும். ஆனால்,  இந்தப் படத்தில் இதுவே முக்கியமாகப் பேசப்பட்டு, சொல்ல வந்த கதை கவனிக்கப்படாமல் போய்விடுமோ? என்ற காரணத்திற்காக அப்படி எடுக்கவில்லை. படங்களில், ஒரு காட்சியைக் காட்டிவிட்டபிறகும் கூட, காட்சியில் என்ன சொல்லப்பட்டதோ, அதே விஷயத்தை  வசனங்களினாலும் வெளிப்படுத்துகிற போக்கு எதற்காக?


இதை மீண்டும், கலை கலையாக இருக்கவேண்டும், என்ற நோக்கில் கேட்கிறீர்கள். காது கேட்கிறவர்களுக்கும் படம் எடுக்கவேண்டும், காது கேட்காதவர்களுக்கும் படம் எடுக்கவேண்டும். நான் அடிப்படையில் வெறும் எம்.ஜி.ஆர் ரசிகன். ”Get out, வெளியே போ”, என்று எம்.ஜி.ஆர் சொல்வார். ”அதுதான் Get Out-னு சொல்லிட்டாரே, அப்புறம் ஏன் ’வெளியே போ”,ன்னு மறுபடியும் சொல்கிறார், என்று எல்லோருமே கேட்டிருப்போம். ”Get out”, என்று எம்.ஜி.ஆர் ஏற்றுநடித்த கதாபாத்திரம் சொல்கிறது. ”வெளியே போ”, என்பது படம் பார்க்கிற நம் சனங்களுக்கு புரிவதற்காக. 

பேராண்மையிலும், துருவன் அதிகமாகப் பேசுகிறான். என்ற விமர்சனம் எழுந்தது. அப்படியிருந்தால் அது Audio Film. என்று சினிமாத்துறையைச் சார்ந்தவர்தான் சொல்கிறார். அவரிடமே, “பேராண்மையை காட்சிரீதியாகப் பாருங்கள். அத்தன்மையை வேறெந்த படம் காண்பித்திருக்கிறது?”, என்று கேட்டேன். பதில் இல்லை. 


படத்தில் 14 பேர் வெளிநாட்டினர். அதில் ஒருவன் தமிழ் தெரிந்தவன்.  கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுவான். அவன்தான் காட்சியில் என்ன நடக்கிறது, எதிராளிகள் என்ன திட்டம் வைத்திருக்கின்றனர்?, என்பதையெல்லாம், வசனத்தில் “இப்போ இங்கே வருகிறார்கள், இதைக் கடந்துவிட்டார்கள்”, என்று மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பான். அப்படி, அவர்கள் திட்டத்தையெல்லாம் பேசவைப்பதன் மூலமே படம் பார்க்கிறவர்களுக்கு என்ன நடக்கிறதென்று,  கடத்திவிடமுடியும், என்று கதைவிவாதத்தில் பலரும் சொன்னார்கள். 


அதைநான் தவிர்த்தேன். அதனால், அவர்கள் பேசுகிற வசனத்தையெல்லாம் ஜெயம் ரவி பேசவேண்டியதாகிவிட்டது. அதனால் Audio Film-ஆகத் தெரிகிறது. ஆனால், கதைவிவாதத்தில் சொன்னதுபோல காட்சியைப் படமாக்கியிருந்தால், அந்தக் காட்சியெல்லாமே கிளிஷேக்களாகயிருக்கும். படம் பார்க்கிறவர்களுக்கும் அது சலித்துவிடும். அதற்குப் பதிலாக, ஜெயம் ரவி பேசுவதே சிறந்தது, என்று அதைத்தேர்ந்தெடுத்தேன். ஆனால், காட்சியாக காட்டியும், வசனத்தில் பேசியும் கூட, படத்தில் என்ன விஷயத்தைப் பேசியிருக்கிறேன், என்பதை பலரும் உள்வாங்கிக்கொள்ள மறுக்கிறார்கள். அதுகூட சிலருக்குப் புரியாமல் போகிறது.


”ஈ”, படத்தில் ”லாபவெறி ஒழிக”, என்று கத்தியவாறு பசுபதி சுடப்படுவார். படம் பார்த்த பத்திரிக்கை நண்பர்கள் பலபேர் என்னிடம் போன் செய்து  “பசுபதி ஏதோ சொன்னவாறே சாகிறாரே அது என்ன?”, என்று கேட்டார்கள். ஒருமுறை வசனத்தை வைத்தால் கூட, அது போதவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன்.”லாபவெறி ஒழிக”, என்று தமிழில் சொல்லப்பட்டது. ”ஈ”, படம் தெலுங்கில் Dubbing செய்யப்படுகிறது. எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனாலும், எதெல்லாம் முக்கியமான வசனங்களோ, அதையெல்லாம் தெலுங்கு நண்பர்களிடம் கேட்டுக்குறித்துக்கொண்டேன். 


பின்பு டப்பிங்க் முடிந்து, படம் ப்ரிண்ட் ஆக வேண்டிய நேரம். அப்போது என்னை அழைத்து திரையிட்டுக் காண்பித்தார்கள். அந்த ”லாபவெறி ஒழிக”, என்று பசுபதி சாகிற இடத்தில், தெலுங்கு வசனகர்த்தா, ”இந்தியா ஜிந்தாபாத்”, என்று சொல்லவைத்திருக்கிறார். நான் அங்கேயே படத்தை நிறுத்தி, ”அந்த இடத்தில் “லாபம் நசிஞ்சாலி”,  சொல்லவேண்டும்”, என்றேன். அந்த எழுத்தாளர் ஒத்துக்கொள்ளவில்லை. 


அவரிடம், ”இது என் படம், தெலுங்கு மக்கள்கிட்டயும் நான் அதேதான் சொல்றேன். லாபவெறி ஒழிக, என்றுதான் படத்தில் வரவேண்டும்”, என்றேன். உடனே அந்த எழுத்தாளர் தத்துவம் எல்லாம் பேச ஆரம்பித்தார், “அப்ப, இந்தப்படத்த எடுக்கிற செளத்ரி சாருக்கு லாபம் வேண்டாமா?”, என்றார். ”செளத்ரி சாருக்கு லாபம் வரட்டும், ஆனால் படத்துக்குள்ளேயிருக்கிற பொருள் லாபவெறி ஒழிக”, என்பதுதான் என்று புரியவைக்க பெரும்பாடானது. தமிழில் கூட, லாபவெறி ஒழிக என்றுதான் இருந்தது, ஆனால் தெலுங்கில் ”லாபம் ஒழிக”, என்று இன்னும் அழுத்தமாகச் சொன்னேன். 


நான் ஏன் லாபம் ஒழியவேண்டும் என்கிறேன், அந்த எழுத்தாளர் எதற்காக அதை மறுக்கிறார், என்பதில் அவரவருக்கும் தனிப்பட்ட கருத்து, புரிதல் இருக்கிறது. லாபவெறி எப்படி ஒழியும்?, அதற்கு என்ன வழி? என்பதெல்லாம் அதற்கடுத்த விஷயம். அதுதான் அரசியல் பொருளாதாரம்.  என் மக்களுடன் என் பார்வையைப் பற்றி, என் படத்தின் வாயிலாகப் பேசுகிறேன். ஒருமுறைக்கு இரண்டு முறை திரும்பியும் ஒரே வசனத்தைப்பேசுவேன். அந்தப் படத்தின் இயக்குனராக அது என் உரிமை.

Leave Comments

Comments (0)