தொடர் வெள்ளம்: குறுகிய கால தீர்வுகள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்

/files/6 2020-10-21 17:50:10.jpg

தொடர் வெள்ளம்: குறுகிய கால தீர்வுகள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்

  • 17
  • 0

பிரபு மல்லிகார்ஜூன்

தமிழில்: கோபி

கடந்த வாரம் ஹைதராபாத்தில் இடைவிடாத மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நகரம் முழுவதும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் இந்த தொடர் பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வை தேட வேண்டும் என்ற அக்கறை நமக்கு உள்ளதா? துரதிஷ்டவசமாக, இல்லை என்றுதான் பதில் வரும்.

ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே நாளில் 200-300மிமீ மழை பெய்தது. இந்த நூற்றாண்டில் பெய்த மோசமான பெருமழையாக இது பதிவானது.

மழை குறைந்தாலும், நகரத்தின் பல பகுதிகள் இன்னும் இருளிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் மிதக்கின்றன. அக்டோபர் 21 வரை அதிகமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

திட்டமிடாத நகரமயமாக்கல் மற்றும் நீர்நிலைகளின் பரிதாபகரமான நியையே இதற்கு காரணம் என நிபுணர்கள் குறை கூறினாலும், சுற்றுச்சூழல் குழுக்களும் நிறுவனங்களும் பரிந்துரைத்த நீண்ட கால தீர்வை தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் செயல்படுத்தாதே மிகப் பெரிய காரணமாக அவர்கள் சுட்டி காட்டுகின்றனர். 

மும்பை, ஹைதராபாத் அல்லது கர்நாடகாவின் குடகு, கிருஷ்ணா நதிப் படுகை நெடுகிலும் உள்ள பெலகாவி, பிடார் மற்றும் பகல்கோட் என கடந்த தசாப்தங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் எதிர்காலம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது. 

வெள்ளத்திற்குப் பிறகு மக்கள் உயிரைக் காப்பாற்ற தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடவும் உடனடியாக நிவாரணம் வழங்கவும் ஆளும் வர்க்கம் கவனம் செலுத்தினாலும், எதிர்காலத்தில் பேரிடர்களை தடுப்பதற்கான நிலையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

பெங்களூரின் இந்திய அறிவியல் நிறுவனத்தில் உள்ள சூழலியல் அறிவியல் மையத்தின் பேராசிரியரான டி.வி. ராமச்சந்திரா கூறுகையில், “நகரின் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து வரும் வேளையில், நமக்கு நிரந்தரமான தீர்வு தேவையாகவுள்ளது. ஆனால் அதிகாரிகளோ பேரழிவு சமயத்தில் மட்டும் நடவடிக்கைகள் எடுத்து சமாளித்து விடுகிறார்கள். இவர்கள் பிரச்சனைக்கு பிளாஸ்திரி போடுகிறார்கள். நமக்கு தேவை உள்ளடங்கிய தீர்வு. அனைத்து அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி பேரழிவை மட்டுப்படுத்த வேண்டும். அறிவியல் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சிபாரிசுகளும் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதில்லை.”

IISc மற்றும் பிற பிரபலமான நிறுவனங்களின் அலோசனைக் குழுக்கள் மற்றும் விஞ்ஞானிகள் வழங்கிய சூழலியல் ஆய்வு மற்றும் பரிந்துரைகளுக்கு அரசாங்க தரப்பிலிருந்து ஏதாவது பதில் வந்ததா எனக் கேட்டால் கோபப்படுகிறார் ராமச்சந்திரா.

“எங்கள் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. எங்கள் ஆய்வு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை அவர்கள் மதிக்கவேயில்லை. ஆளும் வர்க்கத்தினர் தங்கள் சொந்த நலனிற்காக பிரச்சனையை தீர்க் முயல்வதில்லை” என அவர் கூறுகிறார்.

1908-ம் ஆண்டு முசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 15,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 19,000 வீடுகள் அழிந்து போனது. சுற்றுச்சூழல் பேரழிவை குறைப்பதற்கான திருப்புமுணையாக இது அமைந்தது. முசி மற்றும் ஈசா ஆற்றிலிருந்து வரும் நீரை சேமித்து வைக்க இரண்டு பெரிய அணைகள் ஹைதராபாத்தில் கட்டப்பட்டன. வெள்ளத்தை மட்டுப்படுத்தும் இத்திட்டத்திற்கு நாம் விஸ்வரேயாவிற்கு தான் நன்றி கூற வேண்டும். 

முசி ஆற்றில் மேலும் இரண்டு அணைகள் மற்றும் ஈசா ஆற்றில் ஹிமாயத்சாகர் அணை என 1920 மற்றும் 1927-களில் கட்டப்பட்டன. 2000 ஆண்டுவரை ஹைதராபாத் நகரத்தை வெள்ளத்திலிருந்து இதுவே பாதுகாத்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தவறான மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பரிந்துரைகளுக்கு மதிப்பளிக்காததே இந்த நிலைக்கு காரணம்.

“பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றிற்கு நீண்ட கால தீர்வை தேடும் எம்வி போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் இப்போது இல்லை. இப்போதுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் யாரும் மக்களைப் பற்றி நினைப்பதில்லை” என அவர் கூறுகிறார்.

2018-ம் ஆண்டு குடகில் வெள்ளம் ஏற்பட்டபோது, காடழிப்பைக் கட்டுப்படுத்தி மண்ணை இறுக்கி பிடிக்கும் தன்மையுள்ள உள்ளூர் தாவரங்களை வளர்க்க ஊக்குவிக்குமாறு இவரும் IISc-ல் பணியாற்றும் சக பேராசிரியர்களும் பரிந்துரைத்தனர். “உள்நாட்டு தாவரங்கள் இருந்தால் ஆறு வற்றாமல் இருக்கும். நிலங்களைச் சுற்றிலும் உள்நாட்டு தாவரங்கள் இருக்கும் விவசாயிகளுக்கு அறுவடைக் காலத்தில், ஒரு ஏக்கருக்கு ரூ. 1,54,000 கிடைக்கிறது. அதுவே மற்ற விவசாயிகளுக்கு ரூ. 32,000 மட்டுமே கிடைக்கிறது. ஆனால் இன்றுவரை எங்கள் பரிந்துரைகளை அரசு ஏற்கவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் குடகு வெள்ளத்தை சந்தித்தது. இன்று, காடு வளர்ப்பிற்காக ஒதுக்கப்படும் நிதிகள் பெரும்பாலும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. சுழலியல் மதிப்பிள்ளாத வேலமரம் மற்றும் தைலமரம் (யூகலிப்டஸ்) போன்ற கவர்ச்சிகரமான மரக்கன்றுகளை நடுகிறார்கள்” என கோபத்தோடு கூறுகிறார் ராமச்சந்திரா.

“உலக வெப்பமயமாதலால், குறிப்பிட்ட பகுதிகளில் மழை நாட்கள் 45 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைந்துள்ளது. ஆனால் அந்த 10 நாட்களிலும் மழையின் அளவு அதிகப்படியாக இருக்கும். மகராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் செய்த தவறான மேலாண்மையே தெலங்கானாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம்” என அவர் கூறுகிறார்.

2016-ம் ஆண்டு பெங்களூரு நகரத்தின் சதுப்பு நில ஆய்வு அறிக்கை மற்றும் நிலப் பயன்பாட்டு முறையை சமர்பித்தார் ராமச்சந்திரா. குறைக்கப்படாத, திட்டமிடப்படாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நகரமயமாக்கலால் பெங்களூரு இறந்த நகரமாக காட்சியளிப்பதாக அவர் கூறினார். 2020 ஆண்டிற்குள் “வாழமுடியாத” நகரமாக மாறும் என்றும் கூறியிருந்தார். ஆனால், மிகைப்படுத்தி கூறுவதாக அவரது அறிக்கையை அரசியல்வாதிகள் புறக்கணித்தனர். நான் எச்சரிக்கை ஒலியையே எழுப்புகிறேன். அப்போதுதான் அரசாங்கம் உண்மையான பிரச்சனையை கண்டுகொள்ளும் என்கிறார் ராமச்சந்திரா.

“நமது பிரதமர் பாரீஸுக்குச் சென்று கரிமநீக்கம் குறித்து பேசுகிறார். புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை நாம் பயன்படுத்தினாலும், காடு வளர்ப்பில் நாம் பெரிதாக எதுவும் செய்யவில்லை. இதே அரசாங்கம்தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையை பலவீனமாக்குகிறது. மக்கள் மீதும் எதிர்கால தலைமுறையினர் மீதும் அரசியல்வாதிகளுக்கு உண்மையிலேயே அக்கறை உள்ளதா என எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.” 

தீவிரமான தண்ணீர்ப் பிரச்சனைகள் மற்றும் பல பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதை நாம் இனி பார்க்கப் போகிறோம் என அவர் எச்சரிக்கிறார். அவர் கூறுகையில், “அடுத்த தலைமுறையை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்காமல், அடுத்த தலைமுறையினர் மீது அக்கறை கொள்ளாமல் நாட்டின் ஜிடிபி-யை உயர்த்தி ஒரு பயனும் இல்லை.”

Leave Comments

Comments (0)