சென்னைக்கு அத்தியாவசியம்!  மழை நீர் சேகரிப்பு திட்டம் !

/files/erwewewew-2020-11-29-14:45:58.jpg

சென்னைக்கு அத்தியாவசியம்!  மழை நீர் சேகரிப்பு திட்டம் !

  • 13
  • 0


-T.செல்வமணிஒரே ஒரு நாள் தண்ணிர் யாருக்கும் கிடைக்காது  ஏதோ ஒரு பூகோள மாறுபாடு ஏற்பட்டு உள்ளது என்று ஒரு அறிவிப்பு வருகிறது என்னவாகும்? அதிர்ச்சியில் மக்கள் உறைந்து போவார்கள், சமைக்க, குளிக்க, குடிக்க என ஒவ்வொரு மனிதனின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளில் ஒன்று நீர். இப்படி தண்ணீர் கிடைக்காமல் மக்கள் எப்படியெல்லாம் அவதிப்படுவார்கள் என்று இன்று கூட ஒரு சிறந்த திரைக்கதை எழுதி படம் எடுக்கலாம். எந்த ஒன்றும் இல்லாத போது தான் அதன் அருமை தெரியும் என்பது போல தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது தான் அதன் அருமை நம் மக்களுக்குப் புரியும். எதிலும் எப்போதும் அலட்சியப் பார்வை தானே நமக்கு... 
சென்ற வாரத்தின் மிகப்பெரிய பேசுபொருளே நிவர் புயல் தான் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. கனமழை யெல்லாம்  வேண்டாம் சிறிய அளவில் மழை பெய்தால் போதும் சென்னையின் வீதிகளில் முட்டி அளவு தண்ணீர் ஓடும். மழை காலத்தில் தெருக்களையும், வீடுகளையும் சூழ்ந்துகொள்ளும் மழைநீர் ஒருபுறம். கோடையில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் சூழல் மறுபுறம். கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை பற்றி உலக அளவில் விவாதமே நடைபெற்றது. அப்படியிருந்தும் அரசும் பொதுமக்களும் பிரச்சனைகளை தீர்க்க ஏதேனும் நடவடிக்கையை, முன்னெடுப்பை எடுத்தார்களா? என்று கேட்டால் பூஜ்ஜியம் தான். அடுத்த சில நாட்களிலேயே அனுபவித்த துன்பங்களை மறந்து விடுவார்கள் நமக்கு என்ன என்கிற அலட்சியம்... 
குடி தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு, மண் அரிப்பை தடுப்பது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, மழைநீர் தேங்காமல் தவிர்ப்பது என அனைத்திற்கும் தீர்வாக ஒற்றை மாமருந்தாக நம்மிடையே எப்போதோ  நாம் நடைமுறைப்படுத்திய பொக்கிஷமாக ஒரு திட்டம் உள்ளது அதுதான் மழைநீர் சேமிப்பு. இன்று எத்தனை பேர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறை உள்ளது என்று மனசாட்சியைத் தொட்டுப் பார்த்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். 2001ஆம் ஆண்டில் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார் இதன்படி கட்டுமான விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன அதாவது புதிதாக கட்டப்படும் வீடுகள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பை உருவாக்கவேண்டும். தேவைப்படுவோருக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே இந்த அமைப்பை உருவாக்கி கொடுக்கும் இதை செய்ய தவறுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் மழைநீர் சேமிப்பு வசதி இல்லாது கட்டப்படும் கட்டட வரைபடங்களுக்கு திட்ட அனுமதியே வழங்கக்கூடாது என்றும் விதிமுறை உருவானது. இப்படியான ஒரு தொலைநோக்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு சில மாதங்களிலேயே மக்கள் கண்கூடாக அதன் பலன்களை பெற ஆரம்பித்தனர்.


அப்புறம் என்ன அடுத்த ஆட்சி மாற்றம் அதிமுக செயல்படுத்திய நல்ல திட்டத்தை திமுக முடக்கும், திமுக செயல்படுத்திய நல்ல திட்டத்தை அதிமுக தூக்கியெறியும் இவர்களின் இந்த இழிந்த அரசியல். அதன் பிறகு மீண்டும் 2011 அதிமுக அரசு ஆட்சிக்கு  வந்தது அத்திட்டத்தின் மீது அக்கறை காட்டவில்லை மக்களுக்கும் விழிப்புணர்ச்சி இல்லை, மக்களின், அரசின் அலட்சியத்தாலும் அத்திட்டம் அடி ஆழத்தில் புதைக்கப்பட்டு விட்டது. இப்போது தான் கண்விழித்த அதுவும் தேர்தல் அலாரம் அடித்தவுடன் முதல்வரும், துணை முதல்வரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் மழைநீர் சேகரிப்பு பற்றி விளம்பரம் செய்கிறார்கள். உள்ளாட்சித் துறையும், குடிநீர் வாரியமும் கவனமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தால் மக்கள் தண்ணீர் பற்றாக்குறை என்ற ஒன்றை பார்த்தே இருக்க மாட்டார்கள். ஒருபுறம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரைமுறை இல்லாமல் லட்சக்கணக்கான லிட்டர் நீரை நிலத்தில் இருந்து உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது, மறுபுறம் பருவமழை பொய்த்துப் போகிறது, ஆண்டுதோறும் மக்கள் தொகை பெருகி வருகிறது, விவசாயம், குடிநீர் அன்றாட பயன்பாடு, தொழிலாளர்களின் நீர்த்தேவை என அனைத்திற்கும் நிலத்தடி நீர்தான் மூலம் ஆதாரமாக இருக்கிறது. சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில் 40% கடலில் கலந்து விடுகிறது, 35% வெயிலில் ஆவியாகவும், 14% பூமிக்கடியில் நிலத்தடி நீராக உறிஞ்சி வைக்கப்படுகிறது. ஆனால் இப்போது எல்லா இடத்திலும் கட்டிடங்கள் அருகருகே கட்டப்படுகிறது திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால் இங்கு பெய்யும் மழைநீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவது இல்லை என்கிற நிலையே உள்ளது. இப்போதே பெருநகரங்களில் பல இடங்களில் தண்ணீர் உப்பு தன்மையோடு கிடைக்கிறது. இயற்கையின் கொடையான தண்ணீரை கூட விலை கொடுத்துதான் நாம் வாங்கி வருகிறோம். இது எத்தகைய அவலம் என்பதையும், அதன் அபாயத்தையும் நாம் உணரவே இல்லை மழைநீரை சேமித்து காய்ச்சி குடிக்கலாம் மற்ற அனைத்துக்கும் பயன்படுத்தலாம். பொருளாதாரமும் இயற்கையும் சேர்த்தே இதன்மூலம் பாதுகாக்கப்படும். இன்னும் மிக முக்கியமாக கோடை காலத்திலேயே நாம் ஏரி, குளங்களைத் தூர்வாரி விட வேண்டும் மழைநீர் வடியும் விதமாக பெருநகரங்களில் வடிகால்களை அமைத்திட வேண்டும்.  தமிழக அரசு கொண்டு வந்த மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை பார்த்து உலக அளவில் பல பாராட்டினர், நம்மைப் பார்த்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. அப்படியிருக்க இப்போது உள்ள அரசோ! அடுத்துவரும் அரசோ! தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பை அரசே கையில் எடுத்து அனைத்து கட்டிடங்களிலும் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நம் எதிர்கால தலைமுறைக்கு தண்ணீர் மிஞ்சும்! 


எனது வீட்டிற்குச் சென்று கிடப்பில் உள்ள மழை நீர் தொட்டியை நான் சரி செய்ய போகிறேன்...

Leave Comments

Comments (0)