மாட்டிறைச்சியே மனித நாகரீகத்தின் உணவு!

/files/A1-2020-12-11-11:24:26.jpg

மாட்டிறைச்சியே மனித நாகரீகத்தின் உணவு!

  • 26
  • 0

பாரதி பிரதீப்


சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரதான உணவு மாட்டிறைச்சியே - ஜர்னல் ஆப் ஆர்கியலஜிகல் சயின்ஸ் (journal of archaeological survey) ஆய்வறிக்கையில் தகவல்.


மாடு தெய்வம் ; மாட்டு மூத்திரமே மருந்து ; மாட்டுக்காக மனிதனையும் கொல்லலாம் ; மாட்டிறைச்சியை உண்பவர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்களில்லை என்கிறது இந்த கொடுங்கோல் பார்ப்பனீய அரசு ஆனால் நம் நாகரிகத்தின் தொல்லியல் மையங்களான ஹரப்பாவில் மக்கள் பிரதானமாக உண்டது இறைச்சியே அதுவும் மாட்டிறைச்சியே என்கிறது கேம்பிரிட்ஜ் மற்றும் பனாரஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு.


அக்க்ஷைதா சூரியநாராயணன், மிரியம் கியூபஸ், ஒலிவர்.இ.கிரைக் , கார்ல்.பி.ஹிரன் , வசந்த் எஸ்.சின்டே , தாம்சின்.சி.ஓ.கான்னல், காமரூன்  ஏ.பெட்ரை ஆகிய எழுவர் அடங்கிய ஆய்வாளர் குழுவினரால்   வடமேற்கு இந்தியப்பகுதியில் ( சிந்துவெளி நாகரிகப்பகுதியின் கிழக்கே)  " வடமேற்கு இந்தியப்பகுதிகளிலுள்ள சிந்துவெளி நாகரிகத்தின் மட்பண்டகளிலுள்ள கொழுமிய எச்சங்கள்"(Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India)  என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது ,அதன் முடிவுகளின் அடிப்படையில் சிந்துசமவெளி நாகரிகத்தில் மக்கள் பெரும்பான்மையாக  மாட்டிறைச்சியையும் மற்றும் பால்சார்ந்த பொருட்களையுமே உண்டிருக்கிறார்கள் என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இந்த ஆய்வின் பிரதான நோக்கங்களாக  

இந்தியாவின் வடமேற்பகுதியிலுள்ள சிந்துவெளி நாகரிகத்தின் நகரப்பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளில் மட்பண்டங்களிலுள்ள கொழுமியக்(lipid) கூறுகளை ஆராய்தல், கொழுமியக்கூறுகளை ஆராய்தலின் வழியே அங்கு பயன்படுத்தப்பட்ட பால் ,இறைச்சி, தாவர வகைமைகளை வேதிப்பூர்வமாக நிரூபித்தல், பல்வேறு வாழ் நிலப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களுக்கிடையேயுள்ள  வகைமைகளைக் கண்டறிவதன் வழியே சமையல் சார்ந்த முறைமைகளை கண்டறிதல், நகர்ப்புற வீழ்ச்சிக்குப்பின்னும் நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களுக்கான சான்றுகளை கண்டறிதல் என்கிற நான்கு மிகமுக்கிய நோக்கங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது.


உலகளவிலேயே மிகவும் பன்முகத்தன்மைக் கொண்ட நாகரிகங்களில் சிந்துசமவெளி நாகரிகமும் ஒன்று; இதன் பகுதிகளாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வடமேற்கு மற்றும் மேற்கு இந்தியப்பகுதிகள் அடங்கும்.


இதன் காலம் கிமு 2600 - கிமு-1900( mature harrapan ). பல்வேறு ஆய்வுகள் சிந்துசமவெளி நாகரிகத்தைப் பற்றி வந்திருப்பினும் தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஆய்வானது  மிகமுக்கியமானது ஏனென்றால் பன்னெடுங்காலமாக சிந்து நாகரிகம் பார்பனீய நாகரிகமா? ஆரிய நாகரிகமா? என்கிற கேள்விக்கு இதன் மூலம் விடை கிடைக்கும். உணவுப்பழக்கங்கள் ,பயிரிப்பட்ட காய்கறிகள் போன்றவைகளை தொல்லியல் நுட்பத்தினால் அறிவதன் வழியேயும் இன்று நாம் பின்பற்றும் உணவு முறையை ஒப்பிடுவதன் வழியேயும் மேலும் வலுவான ஆதாரமென்று நமக்கு கிட்டும் என்பது அறிஞர்களின் கருத்து.


அந்த வகையில் இந்தியாவின் வடமேற்பகுதிகளான அலம்கிர்புர்,மசூத்பூர்,லோகரி ராஹோ,காஹனக்,பர்மனா,ரக்கிகார்கி(ஹரியானா,உத்தரப்பிரதேசம்) போன்றப் பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இவை முறையே சிந்துவெளி நாகரிகத்தின் 2 சிறு கிராமங்கள், 3 கிராமங்கள், 1 நகரம், 1 பெருநகரம் ஆகும்.இங்கு பலவகைப்பட்ட பாத்திர வகைமைகள் கிடைத்திருக்கின்றன குறிப்பாக இங்கு கிடைத்திருக்கும் மூடியிடப்பட்ட ஜாடிகள் எண்ணெய் மற்றும் ஓயின் வகை மது வைக்கப் பயன்பட்டிருக்கிறது இதைப்போல பல்வேறு வகைப்பட்ட பாத்திரங்கள் கிடைத்திருக்கின்றன. அதேபோல பார்லி,கோதுமை, அரிசி, சிறுதானியங்கள் , எண்ணெய் வித்துக்கள் போன்றவை விளைந்திருக்கின்றன.


இந்த ஆய்வின் முடிவின் அடிப்படையில்  மாடுகள் (அ) எருமைகளின் எலும்புகள் அதிகமாக கிடைத்திருக்கின்றன. 50-60% மாடுகள் அல்லது எருமைகள் எலும்புகளும் ,10% சதவீதம் ஆடுகளின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. 


இதன் மூலம் அளவுக்கதிகமாக மாடுகளின் எலும்புகள் கிடைத்திருப்பதால் மக்களின் உணவுப்பண்பாட்டில் பிரதான உணவாக மாட்டிறைச்சி உட்கொள்ளப்பட்டிருப்பதும் ,கூடுதலாக ஆட்டிறைச்சியும் உட்கொள்ளப்பட்டிருப்பதும் தெளிவாகிறது. அதுமட்டுமில்லாது பன்றி , காட்டு விலங்குகள் ,பறவைகளும் உட்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் ஆய்வு முடிவில் தெளிவாகியிருக்கிறது.இந்த ஆய்வுக்காக 172 பானை ஓடுகள் 7 பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து 73 மாதிரிகள் முறையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இம்முடிவுகள் வெளியாகியிருக்கிறது. 


இந்த ஆய்வின் மூலம் இறைச்சி உண்ணக்கூடிய பண்பாட்டுச் சமூகமாக சிந்துவெளி சமூகம் இருந்திருக்கிறது என்பதும் அதன் பிரதான உணவாக மாட்டிறைச்சி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. 


இதுநாள்வரை மாட்டிறைச்சியின் பேரால் பாசிசப் போக்கை கையாளும் பார்ப்பனீய பாஜகவின் முகத்திரையும் மேலும் கிழிந்திருக்கிறது. 


மாட்டுக்கறி நம் தொல்பண்பாட்டு உணவின்  பிரதானம் அதுமட்டுமன்றி நான் என்ன உணவு உண்பேன் என்பது நம் உரிமையும் தானே!

Leave Comments

Comments (0)