17 உயிர்கள் கொல்லப்பட்டால்தான் தீண்டாமை சுவர் இடிக்கப்படுமா?

/files/detail1.png

17 உயிர்கள் கொல்லப்பட்டால்தான் தீண்டாமை சுவர் இடிக்கப்படுமா?

  • 1
  • 0

வெண்மணியில் வெந்து செத்தோம், பரமக்குடியில் குண்டடிபட்டோம், மேலவளவில் வெட்டுப்பட்டோம், மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை  சுவராலே கொத்து கொத்தாய் கொல்லப்பட்டோம்” என்ற கோஷத்தோடு தொடங்கிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில், துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்கு சொந்தமான உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவருடைய வீட்டைச் சுற்றி, ஆணவ சாதி மக்களையும் தலித்  (அருந்ததியர்) மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையில் 20 அடி தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார்.

alt text

கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாக கடந்த டிசம்பர் 03ஆம் தேதி பெய்த மழையினால் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.

alt text

தீண்டாமை சுவரால் 17  தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. மேலும் காவல்துறையினர் இந்த கொடூரத்திற்குக் காரணமானவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாமல், 17 பேரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடும் தோழர்கள் மீது தாக்குதல் நடத்தி அடக்குமுறையைச் செலுத்தி அவர்களைக் கைது செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறது .

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து 17 தலித் மக்கள் உயிரிழந்ததற்கும், உயிரிழந்த மக்களுக்கு நீதிகேட்டுப் போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று (டிசம்பர் 03) மாலை 4 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் சுந்தரவள்ளி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் வளர்மதி உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.

alt text

அப்போது பேசிய தோழர் தியாகு, ”தலித் மக்கள் இந்த நாட்டில் அடிக்கடி இறந்து போகிறார்கள் என்பதைக்காட்டிலும் வாழும் உரிமையற்று கொல்லப்படுகிறார்கள் . ஒரு வீட்டிற்கு 20 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் இருக்கமுடியும் என்பது வியப்புக்குரிய செய்தியாக இருக்கிறது. அது வீடா? இல்லை சிறையா? என்று கேட்க தோன்றுகிறது. இப்படிப்பட்ட சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் உயிரிழந்த நிலையில், இறந்து போனவர்களுக்கான மரியாதை கூட தரப்படாமல் சவக்குழியில் வைக்கக்கூடிய உடல்களைக் கொட்டும் மழையில் கிடத்திவைத்திருக்கிறார்கள். இதனைக் கண்டித்து தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் திருவள்ளுவன் தலைமையில் தோழர்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரியத் தீர்வு காண்பதற்கு முன்பாக, இறந்தவர்களுக்கான இழப்பீட்டை முறைப்படி அறிவிக்காமலும், சாவுக்குக் காரணமானவரைக் கைது செய்யாமலும் போராட்டம் நடத்திய தோழர்கள் மீது தடியடி நடத்தி நாகை திருவள்ளுவன் உட்பட 25 பேரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. இது கொதிக்கச் செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

alt text

தோழர் வன்னியரசு, “22அடி உயரம், 80 அடி நீளத்தில் கருங்கற்களால் எழுப்பப்பட்டிருக்கிறது அந்த தீண்டாமை சுவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எற்கனவே நமது தோழர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சியில் புகாரும் கொடுத்திருக்கின்றனர். தீண்டாமை சுவரைக் கட்டிய சிவசுப்ரமணியத்தின் சகோதரன் சுகுமாரன் பாஜக கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரின் அரசியல் செல்வாக்கினால்தான் அவ்வளவு உயரமான தீண்டாமை சுவர் கட்டப்பட்டிருக்கிறது.

17 உயிர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமான சிவசுப்ரமணியத்தை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்று தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களைக் கைது செய்த காவல்துறையினர் சிவசுப்ரமணியத்தை சாதாரண வழக்கில் கைது செய்திருக்கிறார்கள். அரசின் அலட்சியப்போக்காலும், மெத்தனப்போக்காலும் 17 பேர் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். தோழர்கள் மீது அடக்குமுறையைச் செலுத்தியதற்கு முக்கியக்காரணம் ஈரோட்டில் எஸ்.பியாக இருக்கக்கூடிய கணேஷ் சக்தி குமார் என்று நாங்கள் பகிரங்கமாகக் குற்றம் சுமத்துகிறோம். தமிழ்நாடு முழுக்க பாதுகாப்பற்ற பகுதிகளில் இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அவர்களுக்கு கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தாருங்கள் என்று தொடர்ச்சியாகக் கோரிக்கை வைக்கின்றோம்” என்று பேசினார்.

alt text

தோழர் வளர்மதி, “17 உயிர்கள் கொல்லப்பட்டிருக்கிறது அதில் 6 குழந்தைகள். ஆனால் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய சலனம் ஏற்படவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆணவ சாதியினாலும், அவர்கள் கட்டிய தீண்டாமை சுவரினாலும், பாஜக-வின் அடிவருடியாக இருக்கும் ஒருவரால் உடல் நசுங்கிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

17 பேரின் உயிரைக் காவு வாங்கிய சிவசுபரமணியத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக சக்திகளைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. 17 பேரைக் கொலை செய்த ஒற்றை மனிதரைக் கைது செய்ய வக்கற்ற காவல்துறை நீதிகேட்டு போராடிய தோழர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்திருக்கிறது. தலித் மக்கள் கொல்லப்பட்டதற்கு மழை காரணமில்லை. ஒட்டு மொத்த சாதி வெறியும், அதிகார திமிரும், அதிகாரிகளின் அலட்சியமும்தான் காரணம்” என்று பேசினார்.

alt text

தோழர் சுந்தரவள்ளி, ”தமிழகத்தில் தொடர்ந்து தலித்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மிக சீரிய முறையில் அதிகப்படுத்தியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. தமிழகத்தில் தலித்துக்களை ஒவ்வொரு நாளும் எதாவதொரு சிக்கலில் மாட்டிவிடுகிற வேலையை காவல்துறை செய்துகொண்டிருக்கிறது. காவல்துறையினருக்கு சமூக விரோதிகள் குறித்தெல்லாம் கவலை இல்லை. சமூகத்தை சீர்திருத்தவேண்டும், சாதி ஆதிக்கத்திற்கு எதிராகப்  போராடவேண்டும் என்று இருப்பவர்களை அடித்து உதைத்து சிறையில் அடைப்பார்கள்” என்று பேசினார்.

 

Leave Comments

Comments (0)