சாதியை ஒழிக்காமல்  மலம் அள்ளும் அசிங்கத்தை ஒழிக்கமுடியாது

/files/detail1.png

சாதியை ஒழிக்காமல்  மலம் அள்ளும் அசிங்கத்தை ஒழிக்கமுடியாது

  • 2
  • 0

-வித்யா 

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, சென்னை அடையாரில் உள்ள டி.என்.ராஜரத்தினம் ஆடிட்டோரித்தில், "வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்" என்ற தலைப்பில் கூட்டம் பெண்களுக்காக நடைபெற்றது. இதில், தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களிலிருந்தும் பல்வேறு பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நேராமல் தடுக்கவும், அரசியலமைப்பு சட்டப்படியும் ஜனநாயகப்படியும் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை மீட்பதற்கும், அன்பு, அமைதி, வன்முறையற்ற சமூகத்தை முன் நிறுவதற்கும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. 

இந்நிகழ்வில், பறையாட்டம், கரகாட்டம்,  பல்வேறு வகையான நாடகங்கள், பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் அனைத்துக் கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தன. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், அங்கு அரங்கேறிய மஞ்சள் நாடகம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் சாதிய ஒடுக்குமுறையை, சாதிய அநீதியைக் வெளிச்சம்போட்டு காட்டியது. 

கருப்பு வாசகர்களுக்காக அந்த நாடகம் எழுத்துவடிவில், 

தீண்டாமை ஒரு பாவ செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல் என்று ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அந்த சமயம், அந்தப் பள்ளியில் பணிபுரியும் சமையலர் அழுதுகொண்டே அந்த ஆசிரியரை நோக்கி ஓடி வருகிறார். "நான் சமைக்க கூடாதாம். நான் சமைத்தால் மாணவர்கள் சாப்பிடக்கூடாதாம்" என்று அந்த ஆசிரியரிடம் கூறி அழுகிறார் அந்த பெண் சமையலர். "இங்க பாரு பாப்பாள் நீ லாம் சமைச்சி எங்க பிள்ளைங்க சாப்பிடணும்னு அவசியமில்ல. பொணம் எரிக்கிறவங்க, கக்கூஸ் கழுவுறவுங்க சமைச்சி எங்க பிள்ளைங்க சாப்பிடக்கூடாதுனுதான் நாங்க போராட்டம் பண்ணுறோம். யாரு எங்க இருக்கணும். யாரு எங்க போகணும் அப்படிங்குறத நாங்கதான் இங்க எல்லாம் முடிவு பண்ணுவோம். போ உன்ன ட்ரான்ஸ்பர்  பண்ண சொல்லி உத்தரவு. நீ இங்க சமைக்க முடியாது போ" என்று அந்த ஆசிரியர் பாப்பாளிடம் கூறுகிறார்.

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டு வகுப்பிறையில் அமர்ந்திருக்கும் மாணவி ஒருவர், "தீண்டாமை மனித நேயமற்றது" என்று உரத்த குரலில் கூறுகிறார். அதைப் பார்த்த ஆசிரியர் ஏய் என்று சொல்ல அந்த மாணவி அமைதியாக படிக்க தொடங்குகிறார்.

இதனை தொடர்ந்தே, மாணவர்களை படிக்க சொல்லிவிட்டு வகுப்பில் அமர்ந்திருக்கும் ஆசிரியர், "சை என்ன இங்க நாறுது. கக்கூஸ் அடைச்சிருக்கும் போல, நாத்தம் கொடல புடுங்குது" என்று கூறி, இரண்டு மாணவர்கள் அழைத்து  கழிவறையை சுத்தம் செய்துவர சொல்கிறார். "நம்ம யூஸ் பண்ற கக்கூச நாம தான் சுத்தமா வச்சுக்கணும்" என்று சொல்கிறார். ஆனால் அந்த மாணவர்கள் இருவரும் அப்படியே அமர்ந்திருக்கிறார்கள். இதில் கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவர்களைத் தடியால் அடிக்கிறார். அந்த மாணவர்கள், " நாங்க மட்டும் எதுக்கு சார் சுத்தம் செய்யணும். வேனா நாறுதுன்னு சொல்ற அந்த பசங்கள சுத்தம் செய்ய சொல்லுங்க" என்று கூறுகிறார்கள்.

அதற்கு ஆசிரியர், "கக்கூஸ் கழுவுறதுக்கு அவங்க என்ன உங்கள மாதிரி கீழ் சாதியிலயா பொறந்தாங்க. எகுத்தா பேசுற, வெளிய போடா, நாலு மார்க் வாங்கிட்டா எல்லாம் சரி ஆகிடுமா? ஊருல யாருடா கக்கூஸ் கழுவுறா? உங்க அம்மாதான. இங்க மட்டும் யாரு பண்ணுவா" என்று கேட்கிறார் ஆசிரியர்.

அதற்கு இன்னொரு மாணவி எழுந்து, "எதுக்கு சார் இப்போ அடிக்கிறீங்க? எங்க அம்மா கக்கூஸ் கழுவுனா நானும் கக்கூஸ்தான்  கழுவுனுமா?  என்று கூறிய அந்த மாணவி ஒரு பெண்ணை காட்டி "இதோ இவங்க அப்பா டாக்டர், அதுக்காக அவ இப்போ ஊசி போட்டா ஒத்துப்பீங்களா? இந்த வேலையைச் செய்யக்கூடாதுனு எங்க ஜெய் பீம் சொல்லிருக்காரு" என்று சொல்கிறார்.

"ஜெய் பீமா? அவரு யாரு, உங்கள கக்கூஸ் கழுவ விடாம கலெக்டர் ஆக்க போறாரா? அவரு"என்று கேட்கிறார் ஆசிரியர். 

"ஆமா சார், எங்கள அவர்தான் கலெக்டர் ஆக்குவார். கம்மி மார்க் வாங்குன பசங்கள விட்டுட்டு எதுக்கு சார், எங்கள அடிக்கிறீங்க? நாங்க என்ன நல்லா படிக்கலையா? நாங்க ஸ்கூலுக்கு படிக்கத்தான் வந்தோம். அப்படி கக்கூஸ்தான் கழுவணும்னா ஸ்கூலுக்கு வந்துதான் கழுவனுமா சார்".  

"கீழ் சாதி நாய்க்கு வாயப்பாருன்னு" ஆசிரியர் அந்த மாணவர்களை அடிக்கிறார். அப்போது, அதில் ஒரு மாணவி, "தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனித நேயமற்ற செயல்" என்று சொல்கிறார் . 

"சேரி கழுதைங்களுக்கு வாய் கூடிடுச்சி. நாலு வார்த்த படிச்சா பொறப்பு மாறிடுமா?, என்னையே எகுத்தா சும்மா விற்றுவனா? என்று அந்த மாணவர்களை மீண்டும் அடிக்கிறார். அவர் அடிக்கும்போது, தீண்டாமை ஒரு பாவச்செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம். தீண்டாமை ஒரு மனித நேயமற்ற செயல் என்று அனைத்து  மாணவர்களும் சொல்கிறார்கள்.

ஆசிரியர், "பாட புத்தகத்துல சொல்லிட்டா தீண்டாமை அழிஞ்சிடுமா? தீண்டாமை ஒரு பாவசெயல்னு சொன்ன நம்ம மகாத்மா காந்திதான், ஒரு தாய் தனது குழந்தைக்கு என்ன பணிவிடை செய்கிறாளோ அதைத்தான் இந்தச் சமூகத்திற்கு ஒரு பாங்கு செய்கிறாள். ஒவ்வொரு துப்புரவு தொழிலாளியிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அப்படி அழைக்கப்படுவதை நீங்கள் அவமானகரமான கருதவேண்டாம். இந்தச் சமூகம் பல சேவை பணிகளை அடிப்படையாகக் கொண்டது. அவற்றில் ஒவ்வொரு சேவை பணிகளுக்கும்  அடித்தளமாக இருப்பவர்  துப்புரவு தொழிலாளி மட்டுமே. தூய்மை பணி என்பது எத்தனைப் புனிதமானது தெரியுமா?    

குலத்தொழில் என்பது உண்மைத்தன்மை வாய்ந்தது. அதை மாற்றினால் ஒழுங்கின்மை உருவாகும். ஒரு பிராமணர் சூத்திரராகவும், ஒரு சூத்திரர் பிராமணராகவும் மாறினால் குழப்பம் உண்டாகும். சாதி அமைப்பு  இச்சமுதாயத்தின் இயற்கையான ஒழுங்குமுறை. சாதி அமைப்பை ஒழிக்கவேண்டும் என்று நினைப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்" என்று நம்ம மாகத்மா காந்தி சொல்லியிருக்கிறார் என்று கூறுகிறார். 

"ஒரு பிராமணர் சூத்திரராகவும், ஒரு சூத்திரர் பிராமணராகவும் மாறினால்  குழப்பம் உண்டாகும். சாதி அமைப்பு  இச்சமுதாயத்தின் இயற்கையான ஒழுங்குமுறை. சாதி அமைப்பை ஒழிக்கவேண்டும் என்று நினைப்பவர்களைக் காந்தி கடுமையாக எதிர்க்கிறார். ஆனா சார், இதுக்கான பதில அப்பவே எங்க அம்பேத்கர் கொடுத்துட்டாரு" என்று கூறி புத்தகத்தை எடுத்து காந்தியம் என்று படிக்க தொடங்குகிறார் மாணவி ஒருவர். அப்போது அந்தப் புத்தகத்தை ஆசிரியர் பிடுங்கி எறிந்துவிட்டார்.

alt text

இரண்டு வினாடி அப்படியே நின்ற அந்த மாணவி கையின் ஒரு விரலை எடுத்து தனது தலையில் காட்டினார். அதாவது படித்து நினைவு இருக்கிறது என்று கூறுகிறார். "காந்தியம், மனித கழிவை மனிதனே அள்ளும் துப்புரவு பணியை ஒரு கௌரவமிக்க தொழிலாக வர்ணிப்பதுடன், அது தொடரவேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறது. நம் இந்தியாவைப் பொறுத்தவரை, தொழில் முறை என்ற ரீதியில், எவரும் இங்கு மனித கழிவுகள் அள்ளும் தொழிலை செய்வதில்லை. ஒருவரின் பிறப்பே அவரை அவ்வேலையைச் செய்ய வைக்கிறது. இந்நிலையில், இந்த வேலை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நல்லது என்று நீதிபோதனை செய்வதும், அவ்வேலையை சீர்மைமிக்க சேவைப்பணியுடன் முடுச்சிப்போட முயற்சிப்பதும், குறிப்பிட்ட அச்சாதியைச் சேர்ந்த, நிர்க்கதியாய் அந்த மக்களை வைத்துச் செய்யப்படும் குரூரமான பகடி" என்று  அம்பேத்கர் கூறியிருக்கிறார் என்று சொல்கிறார். 

பின்னர், "ஒருவர் தனக்கு திறமையும், ஆர்வமும் உள்ள தொழிலை தானே தேர்ந்தெடுத்துக்கொள்ள தக்கச் சூழலைத்தர சாதி அமைப்பு தவறுகிறது. அப்படி என்றால் சாதி அமைப்பு, ஒருவரின் வேலையை முன்கூட்டியே நிர்ணயிக்கிறது. சாதி அமைப்பு ஒருவரின் வேலை, அவரது திறமையின் அடிப்படையில் அல்லாமல், சாதி அடிப்படையில் நிச்சயிக்கப்படுகிறது. மக்களின் பேரில் சாதி இருக்கிறது. ஒருவரை ஒருவர் அடையாளப்படுத்துவதிலும் சாதி இருக்கிறது. அவர்கள் செய்யும் தொழிலில் சாதி இருக்கிறது. அவர்கள் உடுத்தும் உடையில் சாதி இருக்கிறது. நிகழ்த்தப்படும் திருமணங்கள், பேசப்படும் மொழிகளில் சாதி இருக்கிறது. ஆனால் சாதியை கேள்விக்குட்படுத்தும் ஒரு பாடநூலை கூட நான் பார்த்ததில்லை. தீண்டாமை என்பது சாதி அமைப்பின் விளைவு. சாதி இருக்கும்வரை தீண்டாமை இருக்கும். சாதியை ஒழிக்காமல்  தீண்டாமையை ஒழிக்கமுடியாது. சாதியை ஒழிக்காமல்  மலம் அள்ளும் அசிங்கத்தை ஒழிக்கமுடியாது. சாதி இருக்கும் வரை மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கமுடியாது" என்கிறார் அந்த மாணவி.

இதைக்கேட்ட ஆசிரியர் தலைகுனிந்து நிற்கிறார்.

நன்றி: மஞ்சள் நாடகம்.

இந்த நாடகத்தில் ஐ.டி துறையில் பணிபுரியும் விஜய் நாராயணசாமி, சுயதொழில் செய்யும் ரம்யா, பள்ளி படிப்பு படித்துவரும் மிருதுளா, திலீபன், மேகா, நித்திலா ஆகிய நான்கு மாணவர்கள் என அனைவரும்  அருமையாக நடித்திருந்தனர்.

Leave Comments

Comments (0)